Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

உலக அறிவியல் நூல்
ந.சி. கந்தையா




1. உலக அறிவியல் நூல்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. உலக அறிவியல் நூல்


உலக அறிவியல் நூல்

 

ந.சி. கந்தையா

நூற்குறிப்பு
  நூற்பெயர் : உலக அறிவியல் நூல்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

உலக அறிவியல் நூல்


உலக அறிவியல் நூல்

அசுரர்: ஆரியரின் இருக்கு வேதத்தில் அசுரர் என்னும் சொல் கடவுளைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. பிற்காலங்களில் அது தேவரின் பகை வரைக் குறிக்க வழங்கிற்று.
பாரசீகரின் வேதத்தில் அகுரா என்னும் சொல் தேவரைக் குறிக்கும். அசுரர் தமிழரின் ஒரு பிரிவினர். இவர்களில் ஒரு கூட்டத்தினர் மேற்கு ஆசியாவிற் சென்று குடியேறி
அசீரியர் என்னும் பெயர் பெற்றனர். அசீரியரின் கடவுள் அசுர் (ஞாயிறு).

அச்சுதன்: விட்டுணுவின் பெயர்களுள் ஒன்று.

அண்ணாவி: நாடகங்களைக் பழக்குகின்றவனுக்கு அண்ணாவி என்னும் பெயர் வழங்கும். ஒரு விஷயத்தில் கை தேர்ந்தவனை அண்ணாவி என்பதும் வழக்கு.

அண்ணாவி என்னும் பெயருக்குப் பதில் இக்காலம் “டைரெக்டர்” என்னும் பெயர் வழங்குகின்றது. அண்ணாவி என்பதிலும் டைரெக்டர் நாகரிகமான பெயரெனப் பொதுமக்கள் கருதுகின்றனர். கூத்தாடுபவள், கூத்தாடுபவன், கூத்தி, கூத்தன் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டனர். இப்பொழுது “ஸ்டார்” என்று அழைக்கப்படுகின் றனர். ஆடி முதிர்ந்த கூத்தி, தோரியை (தோரிய மடந்தை) எனப்படுவள். இப்பெயர் ‘தோறை’என நாட்டுப் பக்கங்களில் வழங்கும்.

அதிதி: ஆரியர், தாய்க் கடவுளாகக்கொண்டு வழிபட்ட வான் கடவுள். காசியபரின் மனைவிக்கும் அதிதி என்று பெயர்.

அதிரதன்: கன்னனின் வளர்ப்புத் தந்தை.

அத்வாரு: ஆரியரின் யாகங்களில் வேத மந்திரங்களை ஓதும் புரோகிதன்.

அபிமன்னு: அருச்சுனனுக்குச் சுபத்திரை வயிற்றிற் பிறந்தவன். இவன் பாரதப் போரில் 13ஆம் நாள் மடிந்தான். இவனுடைய புதல்வன் பரிச் சித்து. பாரதப்போரின் காலம் கி.மு. 1300 வரையில்.

அபிரிகாட் (apricot) இது ஆர்மேனிய மரம். இதன் பழம் துருக்கி, ராயல் (Royal) மூர்பாக்(Moorpartk) பிரிடியா (Bredia) முதலிய இடங்களில் அதிகம் கிடைக்கின்றது.

அபுபக்கர்: இவர் முகமதுவுக்குப் பெண் கொடுத்த மாமன். முகமது வின் மரணத்துக்குப் பின் இவர் காலிபாவானார்.

ஆதம் பாலம்: (Adams Bridge இராமரணை): இது இராமேசுவரத்தையும் மன்னார்குடாவையும் தொடுக்கும் கல்லும் மண்ணும் உயர்ந்த பாலம். அது முப்பது மைல் நீளமும் ஒன்றரை மைல் அகலமுடையதாகயிருந் தது. ஆதாமின் சுவர்க்க நீக்கத்துக்குப் பின் அவர் இப்பாலம் வழியாக இலங்கைக்குச் சென்றாரென்று முகமதியர் நம்புகின்றனர். 15ம் நூற்றாண்டு வரையில் (1480) இப் பாலம் இருந்தது. பெரும்புயல் ஒன்று நேர்ந்த போது நடுவே உடைப்பு நேர்ந்தது. காலந்தோறும் இவ்வுடைப்புப் பெருத்தது. அப்பொழுது அது வழியாகச் செய்யப்படும் நடைப்பயணம் நின்று போயிற்று. இது இராமரால் குரங்குகள் உதவியைக் கொண்டு இடப் பட்டதென்னும் பழங்கதை உண்டு.

ஆதம் மதத்தினர்: (Adamites): ஆதம் மதம் கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற் றாண்டில் வட ஆபிரிக்காவில் தோன்றிற்று. ஆதாம் ஏவாள் என்போர் வாழ்ந்தது போல உடையின்றி வாழ்தலே சிறந்த மதம் என்பது இவர்கள் கொள்கை. ஆபிரிக்காவில் இம்மதம் மறைந்து போயிற்று. அங்கு நின்றும் அம் மதம் ஐரோப்பாவுக்குப் பரவிற்று. இன்றும் ஐரோப்பாவில் நிர்வாண சங்கங்கள் பல உண்டு. பாரசீகத்திலும் இக்கொள்கை பரவி யிருந்தது.

ஆபு (Mt.Abu): இது அராவலி மலைத் தொடருக்குத் தென் மேற்கிலுள்ள மலை. இது இராசபுத்தானா வனாந்தர விளிம்பிலுள்ளது. இங்குச் சிவனுக்கும் விட்டுணுவுக்கும் ஆலயங்கள் இருந்தன என்று ஐதிகம் உண்டு. அவை இப்பொழுது காணப்படவில்லை. அங்கு சைனக் கடவு ளுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. இம் மலையின் அகலம் 11 மைல்; நீளம் 13 மைல்; சுற்றளவு 50 மைல்; இதன் உயரம் கடல் மட்டத்துக்கு மேல் 5653 அடி.

ஆப்பிள்: இதில் 2000 இனம் வரையில் உண்டு. சுவிட்ஜர்லாந்தில் இதி லிருந்து வின்னாரியும் சாராயமும் (Sirit) செய்கிறார்கள். கலிபோர்னியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து ஏராளமான ஆப்பிள், வியாபாரத்தின் பொருட்டு வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. ஆப்பிள் மரங்களைப் பலமுறை ஒட்டுவதனால் புளிப்பில்லாத பழம் தரும் ஆப்பிள் மரங்கள் உண்டாயின.

இக்கால எகிப்தியர் நோயை மாற்றும் வகை: ஒருவனுக்கு நோய் கண்டால், அவர்கள் ஒரு மட்பாண்டத்தின் உட்புறத்தால் கொரானிலுள்ள சில வரிகளை எழுதுவார்கள். பின்பு அதற்குள் நீரையூற்றி எழுத்துக்கள் அழியும் வரையில் ஆட்டுவார்கள். பின்பு நோயாளி நீரைக் குடிப்பான்.

இந்தியாவில் கல்வி: இந்தியாவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எண்பது பேர் வரையில் கடிதம் எழுத வாசிக்கக் கூடிய கல்வி அறிவு உடையவர்களாயிருக்கின்றனர்.

இரணிய கர்ப்பம்: இது மலையாள அரசனாற் செய்யப்படும் ஒருவகைத் தானம். பொன்னினாற் செய்யப்பட்ட பீப்பாப் போன்ற ஒரு பாத்திரத் தினுள்ளே ஆன் ஐந்து வைக்கப்படும். அரசன் அதற்குள் சென்று இருந்த வுடன் அது பொன் மூடியினால் மூடப்படும். அரசன் அதற்குள் இருந்து பத்துநிமிடம் வரையில் கடவுள் தியானம் செய்த பின்பு வெளியே வருவான். பின்பு விசேஷமான முடி சூட்டுதல் முதன்மைக் குருவாற் செய்யப்படுகின்றது. அப்பொன் பாத்திரம் துண்டு துண்டுகளாக வெட்டிப் பிராமணருக்குத் தானமாக வழங்கப்படும்.

இரவில் வெயில் எரிக்கும் தேசம்: வடதுருவ நாடுகளில் ஆனி, ஆடி (சூன், சூலை) மாதங்களில் சூரியன் வானத்துக்குக் கீழ் செல்வதில்லை. இராக்காலத்திலும் அங்கு வெயில் எரிக்கின்றது.

ஈழுவர்: இது ஈழவர் என்பதன் திரிபு. இவர்கள் இலங்கையினின்றும் சென்று திருவிதாங்கூரிற் குடியேறினார்கள். இவர்கள் செல்லும்போது தேங்காயையும் உடன்கொண்டு சென்றார்கள் என்பது ஐதீகம். தென் என்பதற்குத் தெற்கே இருந்துவந்த தென்பது பொருள்.

ராபின்சன் குருசோ: இந்நூல் டானியல் டிபோ (Daniel Defore 1659-1731) என்பவரால் தனது பதினாறவது வயதில் எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உலகில் நீளமான ஆறுகள்: உலகில் நீண்ட ஆறு மிசௌரி மிசிசிபி (அமெரிக்கா) இதன் நீளம் 4095 மைல். ஆசியாவில் நீண்ட ஆறுகள் யாங்ஸி தியாங் ஆறும், சைபீரியாவிலுள்ள யெனிசி ஆறும் இவைகளின் நீளம் 3200 மைல். ஆப்பிரிக்காவில் நீண்ட ஆறு நைல். அதன் நீளம் 3,500 மைல். காங்கோ ஆற்றின் நீளம் 3000 மைல். ஐரோப்பாவில் நீண்ட ஆறு வால்கா. இதன் நீளம் 2,300 மைல். டான்யூப் நதியின் நீளம் 1750 மைல். மிசௌரி மிசிசிபியின் கழிமுகம் 800 அடி அகலம். அமேசான் ஆற்றின் கழிமுகம் 200 மைல் அகலமுள்ளது.

உலகிற் பெரிய மணி: உலகிற் பெரிய மணி, மாஸ்கோவில் உள்ளது. அதன் அடிப்பாகத்தின் சுற்றளவு 68அடி; உயரம் 21 அடி; கனம் 23 அங்குலம்; நிறை 433,722 இராத்தல். இது ஒரு போதும் தொங்கவிடப்படவில்லை.

உலகிற் பெரிய முகமதியப் பள்ளிவாசல்: உலகில் பெரிய முகமதியப் பள்ளி வாசல் டெல்லியில் உள்ளது. அது “ஜூம்மா மசூதி” எனப்படும். அது 17ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்டது. 201 அடி உயரமும் 450 அடி சதுரமும் உள்ளது. இது மலை மீது கட்டப்பட்டுள்ளது. படிக்கட்டுக்களால் ஏறிச் சென்று இதனை அடைதல் வேண்டும்.

உலகில் மிக முதிய மரம்: உலகிலே மிகவும் முதியமரம் இலங்கையிலே அனுராதபுரத்திலுள்ள வெள்ளரசு. இது அசோக அரசனின் (கி.மு.290) மகளாகிய சங்கமித்தையால் பாடலிபுரத்தினின்றும் இலங்கைக்குக் கொண்டு போகப்பட்டது. இது வட இலங்கையிலே இறக்கப்பட்ட இடம் திருவடி நிலை எனப்பெயர் பெறும். இங்குப் புத்தருடைய பாதம் பாறை ஒன்றின்மீது பொறித்து வணங்கப்பட்டது. அப் பாதம் இன்றும் கடல்வற்றும் நேரத்தில் பாறையிற் காணப்படுகின்றது. புத்தர் தனது ஒரு பாதத்தைத் திருவடிநிலையிலும், மற்றொரு பாதத்தைச் சிவனொளி மலை உச்சியிலும் வைத்தாரென்பது இலங்கைப் புத்தரின் நம்பிக்கை.

உடம்பில் உப்பு: நமது உடம்பிலும் இரத்தத்திலும் ஓரளவு உப்பு இருக்கின் றது. அதிகம் வியர்வை உண்டாகும்போது தாகம் உண்டாகின்றது. வியர்வையில் உப்பு இருக்கின்றது. உப்பு ஓரிடத்துக்கு வருவதால் (Concentrate) தாகம் உண்டாகிறது. நீர் அருந்துவதால் உப்புப் பழையபடி உடம்பில் பரந்து சுவறி விடுகின்றது. நெருப்பில் வேலை செய்வோரும், உடம்புப் பயிற்சி விளையாட்டுப் புரிவோரும் அதிக உப்பை உட் கொள்ளவேண்டும். அவர்கள் உடம்பில் அதிகம் வியர்வை எழுதலால் உப்பு வெளியே வந்து விடுகின்றது.

உலோக காலம்: மக்கள் ஆதியில் செம்பையறிந்தனர். அதன் பின் தகரம் கண்டுபிடிக்கப்பட்ட போது செம்போடு தகரத்தைக் கலந்து வெண்கலஞ் செய்யப்பட்டது. பின்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் உலோகத்தையறிந்து அதைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் உலோக காலம் எனப்படுகின்றது.

உயிர்களின் தோற்றம்: பூமி குளிர்ந்ததும் உடனே எல்லா வகையான பிராணிகளும் தோன்றவில்லை. ஆதியிலே தாவரங்களும் சிற்றுயிர் களும் கடலிடத்தே தோன்றின. கடலிலே மிதந்துகொண்டிருந்த தாவரங்கள் கரையிலே தங்கி இலையில்லாத மரஞ்செடிகளாக வளர்ந்து பின் பல வகைத் தாவரங்களாகப் பெருகின. நட்சத்திர மீன் போன்ற பிராணிகள் படிப்படியே வளர்ச்சியடைந்தது. மீன்களாய்ப் பின் தரையிலும், நிலத்தி லும் வாழும் பிராணிகளாய்ப் பின்விலங்குகள், பறவைகளாயும். மனித னாயும் வளர்ச்சியடைந்தனவெனத் தொல்லுயிர் நூலார் கூறுகின்றனர்.

எண்ணெய்: இது நிலத்திலிருந்து எடுக்கப்படுவது முதல் எல்லா வகையான நெய்களையும் குறிக்க வழங்குகின்றது. நெய் என்பது ஆதியில் பாலிலிருந்து எடுக்கப்படும் நெய்க்குப் பெயராக இடப்பட்டிருத்தல் கூடும். இதன்பின் எள்ளிலிருந்து நெய் எடுக்கப்பட்டது. அப்பொழுது அது எண்ணெய் (எள்+நெய்) எனப்பெயர் பெற்றது. மற்றைய விதைகளி லிருந்து நெய் எடுக்க மக்களறிந்த காலத்து அந்நெய்கள் எண்ணெய் எனப்பட்டன. மற்ற நெய்களிலிருந்து எள் நெய்யைப் பிரித்தறியும் பொருட்டு அது நல்லெண்ணெய் (நல்+எள்+நெய்) எனவும் படுவதாயிற்று.

எரிமலையிலிருந்து வரும் நீராவியால் இயந்திரங்கள் இயக்கப்படு கின்றன: எரிமலைத் துவாரங்களினின்றும் வெளியே வரும் நீராவியைக் குழாய் வழியாகச் செலுத்திக் கனடா தேசத்தில் இயந்திரங்கள் இயக்கப் படுகின்றன.

ஏடன்: இது அராபியக் கரையில் மிகத் தெற்கேயுள்ள முனை. இது ஆங்கிலர் ஆட்சிக்குட்பட்டது. இத் தீபகற்பம் 15 மைல் சுற்றளவுள்ளது. இது பெரிய தரைப்பரப்போடு இணையும் பாகம் 1350 யார் (கஜம்) அகலமுடையது.

ஐரோப்பாவில் அம்பட்ட மருத்துவர்: 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அம்பட்டர் சத்திர மருத்துவம் செய்பவர்களாயிருந்தனர். 18ஆம் நூற்றாண்டு வரையில் அரசன் தொடுவதால் நோய்கள் குணப்படும் என்னும் நம்பிக்கையிருந்து வந்தது. எலும்புருக்கி நோயால் வருந்துவோர் அரசன் தம்மைத் தொடும்படி வேண்டி வேண்டுகோள் அனுப்புவது அக் கால வழக்காயிருந்து வந்தது.

ஒரு ஆண்டில் பூமியில் விழும் விண்வீழ்க் கொள்ளிகள்(Meteors): ஒரு ஆண்டில் 20,000 டன் நிறையுள்ள விண்வீழ்க் கொள்ளிகள் இப்பூமியில் விழுகின்றன. அதனால் ஆண்டுதோறும் இவ்வளவு நிறையால் பூமி அதிகரிக்கின்றது. ஒரு ஆண்டில் இப் பூமியில் விழும் விண்வீழ்க் கொள்ளிகள் 100,000,000 வரையிலாகும்.

ஓராளின் ஓராண்டுச் சராசரி வருமானம்: இந்தியா 82 ரூபா; ஜப்பான் 271 ரூபா; ஜேர்மனி ரூ.634; பிரான்ஸ் ரூ.636; இங்கிலாந்து ரூ.1092; கனடா ரூ.1268; ஐக்கிய அமெரிக்கா ரூ.2053.

கடலில் உப்பு: கருங்கடலில் 100க்கு - 5 வீதமும், செங்கடலில் 4 வீதமும், சாக்கடலில் 25 வீதமும் உப்பு இருக்கிறது. சாக் கடலின் நீர் தடிப்பா யிருப்பதால் அதில் நீந்துவோர் ஆழ முடியாது.

கதிர்காமம்: இது இலங்கையிலுள்ள மிகப் பழைய முருகனாலயம். இங்கு விக்கிரகம் இல்லை. இவ்வாலயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் துட்ட கமுணு வென்னும் அரசனாற் பழுது பார்க்கப்பட்டது. சிங்கள மக்கள் கதிர்காம தேவோ என முருகக் கடவுளை மிகவும் பய பத்தியுடன் வழி பட்டனர். கதிர்காமக் கோயிலுக்குப் பூசை செய்து மேற்பார்ப்போர் கப்புறாளை எனப்படும் சிங்கள மரபினரே. பெரஹிரா என்னும் புத்த தந்தத்தை நகர்வலம் செய்யும் அவர்களின் விழாக்களிலும் பத்தினிக் கடவுளைக் குறிக்கும் சிலம்பும், கதிர்காமக் கடவுளைக் குறிக்கும் பூமாலையும் கொண்டு செல்லப்படும்.

கழுவும் சோடா: இது 90 டிகிரிக்கு அதிக சூடான தண்ணீரில் மெதுவாகக் கரைகின்றது. சிறிது சூடுள்ள நீரில் சோடா விரைவிற் கரையும்.

காகம்: காகம் இல்லாத தேசங்கள் இல்லை. முன்னொரு காலத்தில் இந்திய வியாபாரிகள் பாபிலோனியாவுக்குக் காகத்தைக் கொண்டு சென்றார்கள். பறவைகள் அங்கில்லாதிருந்தமையால் அங்குள்ளவர்கள் காகத்தின் அழகைக் கண்டு வியந்தார்கள். இவ்வரலாறு சாதகக் கதைகளுள் ஒன் றாகிய பவேரு சாதகம் (கி.மு.500) என்னும் புத்த நூலிற் கூறப்பட்டுள்ளது.

கான்கிரீட்: சிமெந்தையும் பருக்கைக் கற்களையும் கலந்து செய்யப்படுவது கான்கிரீட் எனப்படும்.

கார்பாலிக் ஆசிட் அல்லது பேனால் (Benol): இது தாரிலிருந்து (Coal Tar) செய்யப்படுகின்றது. கெட்ட நாற்றத்தைப் போக்கிச் சுத்தஞ் செய்யும் குணமுடையது.

குயில்: இது காகத்தைப் போன்றது. சில குயில்களுக்கு வெள்ளைப் புள்ளி கள் உண்டு. இது சோலைகளில் வாழும். இதன் குரல் இனிமையுடையது. இது தான் இட்ட முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரியாது. காகத்தின் கூட்டில் அதற்குத் தெரியாமல் இட்டுவைக்கும்.

குளோரோபார்ம்: (Chloroform) டாக்டர் சிம்சன்(Dr.Simpson) என்பவர் 1847ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாலாம் தேதி குளோரோபோம் என்னும் மயக்க மருந்தைக் கண்டுபிடித்தார். இது சத்திர வைத்தியம் செய்யும் போது நோயாளியை மயங்கியிருக்கச் செய்யப் பயன்படுகிறது.

குற்றம் அதிகரிப்பதற்குக் காரணம்: கெட்ட கூட்டுறவு, பரம்பரையாக வரும் தீய குணங்கள், மதுபானம், பேராசை, வறுமை என்பன.

குள்ள யானை: காங்கோக் காடுகளில் (ஆபிரிக்கா) ஒரு வகைக் குள்ள யானைகள் காணப்படுகின்றன. அவைகளின் உயரம் ஐந்து அடி முதல் ஆறு அடி உயரம். சாதாரண யானையின் உயரம் பதின்மூன்றடி வரையில்.

சத்தம் கேட்பதற்கு வேண்டும் அலை; சத்தம் காதை அடைந்து கேட்ப தற்கு முன் 35,000 ஒலி அலைகள் காதுச் சவ்வைத் தட்டுகின்றன.

சதுரங்கம் (Chess): இவ் விளையாட்டு இந்திய மக்களால் முதன்முதற் கண்டு பிடிக்கப்பட்டது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பாரசீகர் இதனை இந்தியரிட மிருந்து அறிந்தனர். அராபியர் அதனைப் பாரசீகரிடமிருந்து தெரிந்து கொண்டனர்.

சத்தம்: சத்தம் காற்றில் நொடிக்கு 1100 அடி செல்கின்றது. ஆனால் நீரில் நொடிக்கு 5000 அடி செல்கின்றது.

சந்திரன்: பூமி அனற்பிழம்பாகச் சுழன்று கொண்டிருக்கும் போது அதன் ஒரு பகுதி சிதறிப் பறந்து அந்தரத்தே சுழலவாரம்பித்தது. அதுவே சந்திரன் எனப்படுகின்றது. அதில் கறைபோலத் தோன்றுவன அவிந்து போன எரிமலைகள். தமிழ்மக்கள் சந்திரனிற் காணும் கறையை முயல் என்பர். பூமியிலுள்ள உயரமான மலை எவரெஸ்ட் மலை. அதன் உயரம் 29,000 அடி. சந்திரனிலுள்ளது 42,000 அடி. சந்திரன் பூமியிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு 400 மடங்கு தூரத்தில் சூரியன் இருக்கின்றது.

சாரதா சட்டம்: இது பருவமாகாத பெண்களுக்கு விவாகம் நடத்துதல் சட்ட விரோதம் எனக் கொள்வதோர் சட்டம். இச் சட்டம் சாரதா என்பவரால் (Rai Bahdur Harbules Sarda) 1929இல் கொண்டு வரப்பட்டமையின் இதற்குச் சாரதா சட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. அச்சட்டம் நடப்பில் இருப்பதால் புதுச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் வைத்துப் பாலிய விவாகங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு செய்வது இச் சட்டம் பிரான்ஸ் இராச்சியத்தில் செல்லாது என்பது கருதியே யாகும்.

சாராயம்:(Alcohol) இது சர்க்கரை அல்லது மாவைத் தண்ணீரிற் கரைத்து ஈஸ்ட் (Yeast) புளிக்கச் செய்தபின் வாலையிலிட்டு வடிப்பதால் உண்டா கின்றது. சாராயம் எரியும்போது வெளிச்சம் மெல்லிய நீல நிறமுடைய தாயிருக்கும்.

சாக்கடற் சுகவாசம்: பல ஆயிரம் ஆண்டுகளாகச் சாக்கடல் (Dead sea) சபிக்கப்பட்ட இடமாகக் கருதப்பட்டது. இப்பொழுது அதன்கரை சுகவாசமாகக் காணப்படுகின்றது. சாக்கடல் நீரிலிருந்து பல இரசாயனப் பொருள்கள் எடுக்கப்படுகின்றன. இக் கடல் 14 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 360 சதுர மைல் விசாலமும் உடையது. ஒவ்வொரு நாளும் யோர்தான் ஆறு அதனுள் ஆறு இலட்சம் ‘டன்’ தண்ணீரைத் தள்ளு கின்றது. மாரிகாலத்தில் பல நீர் ஊற்றுக்களும் சிற்றாறுகளும் இதனுள் விழுகின்றன. இக் கடலுக்கு வெளியே நீர் செல்வதற்குக் கால்வாய்கள் இல்லை. இதற்குள் விழும் நீர் அவ்வளவும் நீராவியாக மாறுகின்றது. கடல் நீரில் நூற்றுக்கு நாலு முதல் 6 பங்கு உப்பு உண்டு . இக்கடலில் 25% உப்பு இருக்கின்றது. இதில் எவ்வகை உயிரும் வாழ முடியாது. யோர்தான் ஆறுகொண்டு வரும் மீன்கள் இறந்துபோகின்றன. இதில் உப்பு அதிகம் இருப்பதால் நீந்துவோர் ஆழ்ந்துவிடமாட்டார். இக் கடலில் 12 இலட்சம் டன் நிறையுள்ள உப்பு உண்டு. இன்னும் பலவகை யான மருந்து உப்புக்கள் இதினின்று கிடைக்கின்றன.

சில உயிர்கள் பெருகும் வகை: ஒரு முயலிலிருந்து பெருகும் சந்ததி மூன்று ஆண்டுகளில் 13,718,000 ஆகும். ஒரு நடுத்தரமான காட்(Cod) மீன் ஒரு முறையில் 7,000,000 முட்டைகள் வரையில் இடும். ஒரு வண்ணாத்திப் பூச்சியிலிருந்து மூன்று ஆண்டுகளில் 1,000,000,000 வண்ணாத்திப் பூச்சிகள் தோன்றும். ஒரு யானையிலிருந்து தடையின்றிச் சந்ததி பெருகுமானால் 750 ஆண்டுகளில் 1,900,000 ஆகப்பெருகும்.

சில பிராணிகளின் உயரம்: ஒட்டைச் சிவிங்கி 20 அடி; முதலை 20 அடி நீளம்; மலைப்பாம்பு 25 அடி நீளம் கிரீன்லாந்து திமிங்கிலம் 70 அடி நீளம் தத்தனோஸியஸ் (Tatanosiuas) என்னும் முற்கால மிருகத்தின் நீளம் 100 அடி, உயரம் 30 அடி. இதன் எலும்புகள் அமெரிக்காவிலேயுள்ள பாறை அடுக்குகளிற் காணப்பட்டன.

சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள் என்னும் சேர இராசகுமாரனால் கி.பி. இரண்டாவது நூற்றாண்டிற் செய்யப்பட்டது. இது கண்ணகி கோவலன் என்னும் இருவர் வரலாற்றைக் கூறுகின்றது. இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவனின் தம்பி. சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் என்னும் ஒரு புலவர் உரை எழுதியுள்ளார்.

சிறுவரின் ஒழுக்கத்துக்குக் காரணம்: வீட்டிலுள்ளவர்கள், நண்பர். புத்தகங்கள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் என்பன.

சீமேந்து: (Cement) களித்தன்மையும் சுண்ணாம்புத்தன்மையுமுள்ள மண்ணைச் சுட்டு உருளையிலிட்டு அரைப்பதால் சிமெண்ட் உண்டாகின்றது. இது தண்ணீர் பட்டதும் கடினமாகும் தன்மையுடையது.

செங்குந்தர்: இவர்கள் சோழ தேசக் கல்வெட்டுக்களில் வாள் பெற்ற கைக் கோளர், வேல் பெற்ற கைக்கோளர் எனப்படுகின்றனர். இவர்கள் அரசனது பட்டாளத்தில் போர்வீரர்களாகவிருந்தனர். இவர்கள் இப்பொழுது கைக்கோளர் என்னும் பெயரைப் பெற்று நெசவுத் தொழில் செய்வர்.

செம்பு: பழங்காலத்தில் ட்றான்ஸ்வால்(தென்னாப்பிரிக்க) சுரங்கங்களில் செம்பு எடுக்கப்பட்டது. எகிப்தியரின் தெய்வங்கள் இதனால் செய்யப் பட்டிருக்கின்றன. செம்போடு 1/10 பங்கு தகரம் கலந்து வெண்கலம் செய்யப்பட்டது.

தாவர உணவு கொள்ளும் உயிர்கள் நீண்ட காலம் வாழ்கின்றன: ஊன் உண்ணும் உயிர்களைவிடத் தாவரப் பொருள்களை உண்ணும் உயிர்கள், நீண்ட காலம் வாழ்கின்றன என்று இக்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

திரு: இது அழகு முதலிய பல பொருள்களைக் குறிப்பதாயினும் கடவுளோடு தொடர்புற்ற பெயர்களுக்கு முன்னால் வைத்துப் பழைய நாள் தொட்டு வழங்கப்படுகின்றது. இதற்கு உதாரணம் திருக்கோயில், திருமெழுக்கு, திருவலகு போல்வன. திருவிதாங்கூர் அரசனது அரண்மனையிலும், அரசனோடு தொடர்பு பெற்றவைக்கு முன்னும் திரு வழங்குகின்றது. திரு, திருவாளர் என்பன, ஸ்ரீ , ஸ்ரீமான் என்பவைகளுக்குப் பதிலாக இக் காலத்தில் வழங்குகின்றன.

திருத்தணிகை: இது அரக்கோணத்துக்கு எட்டு மைலிலும் சென்னைக்கு 51 மைல் தூரத்திலுமுள்ள முருகன் கோயில். சூரனை வதைத்த பின் முருகக் கடவுள் சினம் ஆறியிருந்த இடமாதலின் இத்தலம் திருத்தணிகை எனப்பெயர் பெற்றது. இங்குத்தான் முருகக் கடவுள் சாமிநாதனாக விருந்து இறைவனுக்குப் பிரணவத்தின் பொருளைக் கூறினார் என்பது ஐதீகம்.

துலாபாரம்: இது திருவிதாங்கூர் அரசரால் அவர்கள் ஆயுட்காலத்தில் ஒருமுறை செய்யப்படும் ஒருவகைத் தானம். அரசன் தனது வாளுடனும் கேடகத்துடனும் ஒரு தட்டிலிருக்க அந் நிறைக்குச் சமமான பொன்னை இன்னொரு தட்டிலிட்டு நிறுத்து அதனைப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்வது துலாபாரம் எனப்படுகின்றது. இந்நிறை £ 12,000 வரையிலும் விழாவிற்கு ஆகும் செலவு £ 4000 வரையிலும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

நத்தை ஆறுமாதங்கள் நித்திரை கொள்ளும்: நத்தை ஆறுமாதத்துக்கு நித்திரை கொள்ளும். இலண்டன் நூதன சாலையில் ஒரு வனாந்தர நத்தை இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் விழித்தெழுந்தது.

நாம் உணவு உட்கொள்வது ஏன்?: இயந்திரங்கள் இயங்குவதற்கு விறகும் தண்ணீரும் தேவைப்படுவது போலவே, நமது உடம்புக்கும் உணவு தேவைப்படுகின்றது. நாம் மூச்சு விடும்போது உட்கொள்ளும் பிராண வாயு தசைநார்களுடன் சேர்ந்து எரிகின்றது. ஒருமனிதன் ஒரு நாளில் 30 அவுன்ஸ் பிராணவாயுவை உட்கொள்ளுகின்றான். ஒரு மனிதனின் உடம்பில் ஒரு நாளில் உண்டாகும் வெப்பம் அரைக்காலன் குளிர்ந்த நீரை முப்பத்திரண்டு பாகைக்குக் கொதிக்கச் செய்யக் கூடியதாகும். இவ் வெப்பம் உடம்பிலுள்ள பொருள்களை எரிப்பதால் உண்டாகிறது. இவ் வாறு எரிப்பதால் உண்டாகும் தேய்வுக்கு உணவு கொடுத்து நிரப்பா விடில், கருவிகள் சூட்டினால் தகிக்கப்படும்.

நித்திரை கொள்ளவேண்டிய நேரம்: நித்திரை கொள்ளும் மணி நேரம் மனிதனுக்கு ஆறும், பெண்களுக்கு ஏழும், மூடனுக்கு எட்டும் என்பது பழமொழி. நெப்போலியன் இரண்டு மணி நேரத்துக்கு அதிகம் நித்திரை கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

பகவத்கீதை: இது கிருட்டிணனால் அருச்சுனனுக்குப் போர்க்களத்தே உப தேசிக்கப்பட்ட நூல் என்று சொல்லப்படுகிறது. கண்ணன் தமிழரது கடவுள். பகவத் கீதையிலும் கூறப்பட்ட ஞானம் மிகவும் போற்றப்படு கின்றது. இது பழைய தமிழர்களில் விசேஷ ஞானத்தை விளக்குவதாகும். இது கி.மு.6ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகிறது.

பல யுகங்கள்: பூமிக்கு மேல் இருபத்திரண்டு மைல் கனம் மண் ஏறுண் டுள்ளது. அக் காலத்தை நில நூலார் நாலு யுகங்களாகப் பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வகைப் பிராணிகள் வாழ்ந்தன. ஒரு யுகத்தில் வாழ்ந்த பிராணிகள் அடுத்த யுகத்திற் காணப்படவில்லை. இவ் வகைப் பிராணிகளின் என்புகள். நில ஆழத்திற் கண்டு எடுக்கப்பட்டன. அப் பிராணிகளின் தோற்றம் மிகவும் ஆச்சரியம் விளைப்பன.

பழைய கற்காலம்: மனிதன் முரடான கற்களால் ஆயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் எனப்படுகின்றது. மனிதன் ஆயுதங்களைச் செய்யவும் நெருப்பையுண்டாக்கவும் மிகப் பழைய காலத்திலேயே அறிந்திருந்தான். பழைய கற்கால மக்கள் செய்து பயன் படுத்திய அநேக ஆயுதங்களும் பொருள்களும் அவ் வடிவுடையன வாய் நல்ல முறையிற் செய்து இன்று வரையும் பயன்படுத்தப்படுகின்றன.

பாக்டீரியா(Bacteria): பாக்டீரியா என்னும் நுண்ணிய கிருமிகள் எங்கும் நிறைந்துள்ளன. இவைகளுட் சில நோய்களை உண்டாக்குவன: சில நன்மைகளைப் புரிவன. அம்மை, பிளேக், வாந்திபேதி (காலரா) போன்ற தொற்று நோய்களை உண்டாக்குபவை தீய பாக்டீரியாக்களாகும். ஒரு பாக்டீரியாவின் குறுக்களவு ஒரு அங்குலத்தில் இருபத்தையாயிரத்தில் ஒரு பங்கு ஆகும்; 64,000,000,000 கிருமிகள் சேர்ந்தால் ஒரு தானிய எடைஆகும்.

பாரசூட்: “பாரசூட்” என்பது விமானத்திலிருந்து குதிப்பதற்குப் பயன் படுத்தப்படும் குடை. இதைச் செய்வதற்கு நூறு கெஜம் நல்ல பட்டுத்துணி தேவை. அது 300 துண்டுகளாக வெட்டித் தைக்கப்படும். குடையின் கீழ் புறத்தில் கட்டப்படும் கயிறுகள் 2500 இராத்தல் பாரத்தைத் தாங்கக் கூடியனவோ என்று சோதிக்கப்படும். “பாரசூட்” பயன்படுத்தப்படுவதன் முன் பலமுறை சோதிக்கப்படும். ஒவ்வொரு பாரசூட்டிலும் ஒவ்வொரு குறிப்புப் புத்தகம் எழுதி வைக்கப்பட்டிருக்கும். முதலில் அது பறக்கும் விமானத்திலிருந்து 180 இராத்தலுள்ள ஒரு பாரத்தைக் கட்டிக் கீழே விட்டுச் சோதிக்கப்படும். அது பயன்படுத்தப்பட்டாலும் பயன்படுத்தப் படாவிட்டாலும் மாதம் ஒரு முறை சோதிக்கப்படும். பாரசூட்டோடு நிலத் தில் இறங்குகின்றவனுக்கு ஏழு அடிச் சுவரிலிருந்து குதிப்பது போன்ற அதிர்ச்சி உண்டாகும்.

பாலங்கள்: ஆறுகள், மனிதன் பாய்ந்து கடக்க முடியாத அகலமுடையனவா யிருக்கின்றன. ஆகவே முற்கால மக்கள் ஆறுகளைக் கடப்பதற்குப் பல உபாயங்களைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று நீந்துதல், மற்றது படகு களின் பயன் நடந்து செல்லக் கூடிய பாலம் இவ்விரண்டிலும் சேம மானது. ஒரு முறை பாலம் அமைத்து விட்டால் பின் எப்பொழுதும் யாரும் வருத்தம் இன்றி நடந்து செல்லலாம். ஆகவே மக்கள் ஆறுகள் மீது பாலமிட முயன்றார்கள். சில சமயங்களில் ஆற்றின் ஒரு கரையில் நின்ற மரம் சாய்ந்து விழுந்து அதன் மற்றக் கரையை அடையக் கூடிய தாக விருந்தது. ஆதியில் இவ்வகை மரங்கள் பாலங்களாகப் பயன்பட் டன. ஆற்றின் நடுவே மரத்தூண்களை நாட்டி அவைகள் மீதுவிடப்பட்ட இரண்டு மரங்களே முற்கால மக்களின் பாலங்களாகும். முற்காலங்களில் மரத்தூண்களை இறுக்கி அவைமீது மரக்கட்டைகளை பரப்பிப் பாலங் கள் இடப்பட்டன. இவ்வகைப் பாலம் பாபிலோனில் ஐபிராந்து நதிமேல் இடப்பட்டிருந்தது. அப் பாலத்தை நூறு கற்றூண்கள் தாங்கின. பாரசீக அரசனாகிய சைரஸ் (கி.மு. 480) கிரீசு மீது படை எடுத்தபோது அவன் இரண்டு மரக்கலங்களைப் பாலங்களாகப் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தான்.

பால் கறக்கும் இயந்திரம்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கையி னாலேயே மாடுகளில் பால் கறந்தார்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் இன்று பசுக்களிலிருந்து இயந்திரம் வாயி லாகக் பால் கறக்கப்படுகின்றது. பசுவின் ஒவ்வொரு முலையிலும் இரப்பர் கவசமிட்ட இரும்புக் குழாய்கள் மாட்டப்படும். இயந்திரம் வேலை செய்யும்போது கன்றுக்குட்டி வாய்வைத்துப் பால் குடிப்பதுபோல் அக் குழாய் இயங்கிப் பாலைக் கறக்கும். கையால் கறக்கும் பாலிலும் இயந்திரம் கறக்கும் பால் குறைவதில்லை. இயந்திரம் மூலம் நாலு அல்லது ஐந்து நிமிடங்களில் முப்பது மாடுகளளவில் பாலைக் கறந்துவிடலாம்.

பாதைகள்: சக்கரங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன் ஒற்றை அடிப்பாதை களும் முரடான வீதிகளும் இருந்தன. சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் செம்மையான வீதிகள் அமைக்கும் அவசியம் ஏற்பட்டது. சக்கரங்கள் நிலத்திற் புதையாதபடி கீழே கற்கள் பதிக்கப்பட்டன. ஹெரதோதஸ் (கி.மு.484-425) ஐசியன் கடற்கரை முதல் பெர்சியா வரையும் வியாபாரப் போக்கு வரத்துக்கேற்ற பாதைகள் இருந்தனவென்று கூறியிருக்கின்றார். பழைய வியாபாரப் பெரும் பாதை சின்ன ஆசியாவில் ஆரம்பமாகி பாரசீகத்துக் கூடாக ஆப்கானிஸ்தானம் இந்தியா தேசங்களின் ஊடே சென்று வட கிழக்குச் சீனாவைத் தொடுத்தது. மெசபெத்தேமியா எகிப்து, கிரீசிலுள்ள பெண்கள் சீனப்பட்டுக்களை உடுத்தினர். கிறிஸ்து பிறப்ப தற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சுமேரியாவுக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்கின் நகரகங்களுக்குமிடையில் பெரும் வர்த்தகம் நடை பெற்றது. சீனர் பட்டுஉற்பத்திச் செய்வதை கி.மு.2000இல் அறிந்திருந் தனர். முதல் முதல் கல்லுப் பதித்த வீதி சியோப்ஸ் அரசனால் (கி.மு. 29ஆம் நூற்றாண்டு) எகிப்தில் திறக்கப்பட்டது. இந்த வீதியை ஆயிரக்கணக்கான அடிமைகள் பத்து வருடகாலமாக வேலை செய்து முடித்த னர் என்று ஹெரதோதஸ் என்னும் சரித்திராசிரியர் கூறியிருக்கின்றனர்.

பிலிப்பைன் தீவுகள்: பிலிப்பைன் தீவுகள் என்பன வாசனைச் சரக்குத் தீவுகள் எனவும் அறியப்படும். இத் தீவுகளுக்குத் தலைநகரம் மணிலா. இத் தீவுக் கூட்டத்தில் 7083 தீவுகள் உண்டு. இத்தீவுகள், முன் ஒன்றாயிருந்து பின் எரிமலைக் குழப்பங்களால் இவ்வாறு சிதறுண்டன என நில நூலார் கூறுகின்றனர். மணிலா சுருட்டுக்குப் பேர் போனது.

பில்லி, சூனியம்: .இலங்கையிலே கொழும்பு நூதன பொருட்காட்சிச் சாலை யில் பல மண் பாவைகள் காணப்படுகின்றன. பில்லி, சூனியம் செய்யும் மந்திர வித்தைக்காரர் மண்பாவை செய்து எதிரியின் பெயரை அதில் எழுதி, அவனுக்கு என்ன வகையான தீமை வரவேண்டுமோ அவ்வகை யான தீமை வரவேண்டுமென்று சொல்லி மந்திரம் போடுவார்கள். அவனது கை முறிய வேண்டுமாயின் அப் பாவையின் கையை முறித்து விடுவார்களாம். இவ் விவரங்கள் அங்கு எழுதப்பட்டிருக்கின்றன. மேற்குத் தேசங்களில் மந்திர வித்தைக்காரர் உயிரோடு கொளுத்தப்படு தல், நீரில் அமிழ்த்திக் கொல்லப்படுதல் ஆகிய தண்டனை பெற்றனர்.

பொற்பூண் கட்டிய பிரம்பு: பழைய காலத்தே அரசர் கட்டளையை நிறை வேற்றும் அதிகாரிகள் பொன் பூண் கட்டிய பிரம்பைக் கையில் வைத் திருந்தார்கள். இது திருவிளையாடற் புராணத்திலே அரச உத்தியோகத்தர் “மாறு கொண்டுறுக்கி வன்கரை அடைக்கலுற்றார்” என வருவதாலும் “தென்மலைப் பிறந்த பொன் மருள் சூரல்- கருங்கண்டோறும் பசும் பொன்னேற்றித்தொடித்தலைப்படுகோல் பிடித்தகையர்” எனப் பொருள் கதையில் வருவதாலும் அறியப்படும்.

புலுற்றோ என்னும் கிரகம்: இது 1930இல் டாக்டர் லோவெல் (Dr. Lowell) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பீர்: (Beer) இது வாலையில் வடிக்கப்படாத குடிவகை. இது வாளியை முளைக்கவிட்டுப் பின் வறுத்து அரைத்துப் புளிக்கவிட்டு வடிக்கப்படு கின்றது.

புதிய கற்காலம்: மக்கள் கற்களைப் பாறைகளிற் றீட்டி அழகாகவும் அழுத்த மாகவும் செய்து பயன்படுத்திய காலம் புதிய கற்காலம் எனப்படுகின்றது. கற்கால மக்கள் உலோகத்தைப் பற்றி அறியவில்லை.

பூமியினுள் நெருப்பு: இப்பூமிக்கு ஐம்பத்திரண்டு மைல்களுக்குக் கீழ் நெருப்பு இருக்கின்றது. இதன் முப்பது மைல்கனம் முன்னமே குளிர்ந் துள்ளது. மீதி 22 மைல் கனமும் காலத்தில் எரிமலைகள் சிட்டங்களை மேலே இறைத்ததாலும் கடல் நிலமாகவும், நிலம் கடலாகவும் மாறுத லடைந்தமையால் மண் ஏறுண்டது.

மருமக்கள் தாயம்: எல்லா உலகிலும் நடப்பது மக்கள்தாயம். மக்கட்டாயம் என்பது தந்தையின் சொத்தில் பிள்ளைகளுக்குள்ள உரிமை. மலை யாளத்தில் மருமக்கட்டாயம் என்னும் வழக்குண்டு. தந்தையின் சொத்துப் பிள்ளைகளுக்குச் சேராமல் சகோதரியின் பிள்ளைகளுக்கு ஆதலை மருமக்கட்டாயமென்பார்கள். இவ்வழக்கு நாயர், தீயர்,சீரிய கிறித்துவர் முதலிய சாதிகளிடையே காணப்படுகின்றது.

மலையாள அரசுரிமை: மலையாளத்தில் அரசுரிமையும் இவ்வகையினதே. அரசனது சகோதரியின் பிள்ளைகளுக்கே (மருமக்களுக்கே) அரசுரிமை சாருகின்றது. உரிமை பெண் வழியை சார்ந்தது. மருமக்களே இராசா. இராணி என்னும் பெயர் பெறுவர். இராணியின் கணவன் இராசா எனப் படுவதில்லை. அரசனின் மனைவி அம்மாச்சி எனப்படுவர். அரசனின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அரசுரிமையில் எவ்வகை உரிமையு மில்லை. அரசன் உயிரோடு இருக்கும்போதே அவர்களுக்கு வேண்டிய பொருளை விடுவான்.

மயில்: இது இந்தியாவிலும் கிழக்குத் தீவுகளிலும் காணப்படும் பறவை. சாலமன் அரசன் காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக மயில் களை இந்தியாவினின்றும் வாங்கிச் சென்றனர். அக் காலத்தில் மயில் அழகுக்காக வளர்க்கப்பட்டதோடு உணவுகளுக்கும் பயன்படுத்தப்பட் டது. இது அசோகனின் கல்வெட்டுக்களாலும் விளங்குகின்றது. உரோமில் மயிலின் நாக்கு உயர்ந்த உணவாகக் கருதப்பட்டது. முற்கால மக்கள் மயில் இறகுகளால் தம்மையும் வீடுகளையும் அலங்கரித்தனர். மயிலிறகினால் அழகிய விசிறிகள் கட்டப்படும். அது மருந்துக்கும் உதவுகின்றது. இது பாம்புகளைக் கொல்லும். பச்சோந்தியைக் கண்டால் இது நடுங்கும் என்று சொல்லப்படுகின்றது. பச்சோந்தி இதன் கண்களைக் கொத்தி எடுத்து விடுமாம். மயிலுக்கு மயூரம் என்பதும் இன்னொரு பெயர். இச்சொல் தமிழ் எனக் “கிற்றெல்” என்னும் ஆசிரியர் கூறுவர். மேகம் இருள்வதைக் கண்டால் மயில் ஆடும். “கார்கண்ட மஞ்ஞை” எனத் தமிழ் நூல்கள் கூறும். மயில் சேவல்களை அழகிய பெண்களுக்கு உவமிப்பதும் வழக்கு. நொச்சி இலையை மயிலின் அடிக்கும். காயாம் பூவை அதன் கழுத்துக்கும் உவமித்தல் மரபு.

மிகப் பழைய மனித எலும்பு: உலக முழுமையிலும் மிகப் பழைய மனித எலும்பு ஜாவா தேசத்திற் கண்டு எடுக்கப்பட்டது. இவ் வெலும்புக்குரிய ஆள் ஐந்து இலட்சம் வருடங்களில் வாழ்ந்திருத்தல் வேண்டுமென ஆராய்ச்சியாளர் கூறுவர். அவர்கள் இவ்வாறு பீங்கிங், ஐரோப்பாவின் பல பகுதிகளிற் கண்டெடுத்த பழைய மக்களின் மண்டையோடுகளைக் கொண்டு மனிதன் குரங்கு போன்ற தோற்றத்தினின்று படிப்படியே வளர்ச்சியுற்று இக்கால நிலையை அடைந்தான் எனக் கூறுவர்.

அளவு மீறி உண்டால் விரைவில் மரணம்: அளவுக்கு அதிகம் உணவை உண்பதால் மனிதன் விரைவில் இறந்து விடுகிறான். உண்ணக் கூடிய தற்குச் சிறிது குறைவாக உண்பதால் ஆயுள் நீடிக்கும்.

ஆழம் கண்டுபிடிக்க முடியாத வாவி: தென்னமெரிக்காவில் திசுமெல் (Tsumel) என்னும் இடத்தில் ஒரு வாவி இருக்கிறது. அதன் ஆழம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகிலுள்ள பிரசைகள் ஒவ்வொருவரும் இராணுவச் செலவிற்குப் பங்கு பற்றும் தொகை: 1918ஆம் ஆண்டு ஒரு செர்மன் பிரசை 12 பவுனும் பிரிட்டிஷ் பிரசை 7 பவுனும் இரசிய பிரசை 6 பவுனும் பிரான்சிய ஜப்பான் பிரசை மூன்று பவுனும் இத்தாலிய பிரசை 2 பவுனும் சராசரி இராணுவச் செலவிற் பங்கு எடுப்பதாகக் கணக்கிடப்பட்டது.

எகிப்தியர் மீன்களைப் பக்குவஞ்செய்ய அறிந்திருந்தனர்: எகிப்தியர் மீன்கள் கெடாமல் பக்குவஞ் செய்யும் முறையை அறிந்திருந்தனர். அவர்கள் மீனை லினன் துணியில் சுற்றி ஒருவகைத் தண்ணீரில் இட்டு வைத்தனர். இன்றும் அம் மீன்கள் பழுது படாதிருக்கின்றன.

ஒன்பது கிரகங்கள்: புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூறானஸ், நெப்தியூன், ப்ளாட்டோ(Pluto) சோதிடர் கூறும் கிரகங்கள்: ஞாயிறு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது.

குற்றவாளிகள் வீதிகளில் வேலை செய்தனர்: “அநிசிஸ்” என்னும் எகிப்திய அரசன், கொலைத் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவர்களை ஆயுட் காலம் வரையில் வீதிகள் அமைக்கவும், மதில்கள் கட்டவும் வேலை புரியும்படி கட்டளையிட்டான். இம் முறையைப் பின்பற்றி உரோமர், குற்றவாளிகள் பொது வேலைகள் செய்தல் வேண்டுமென விதித்தனர். சீனாவிலுள்ள வீதிகள் எல்லாம் மிகவும் வளைவுள்ளன. பிசாசுகளிலிருந்து பிரயாணிகள் தப்புவதற்காக இவ்வாறு வீதிகள் அமைக்கப்பட்டன என்று நம்பப்படுகின்றது. அவர்கள் பிசாசுகள் நேராகவன்றி வளைந்து செல்ல மாட்டாவென்று நம்புகின்றனர்.

சந்திரன்: சந்திரனின் குறுக்களவு, 2160 மைல் அல்லது பூமியின் குறுக்கள வில் நாலில் ஒரு பங்கு, அது பூமியிலிருந்து 289,000 மைல் தூரத்தில் இருக்கின்றது. அது பூமியை 28 நாள், 7 மணி, 43 நிமிடம், 7 செக்கண்டில் ஒரு முறை சுற்றி வருகின்றது. அது தனது பாதையில் மேற்கிலிருந்து கிழக்கே செல்கின்றது. அதன் ஒரு பக்கம் வெளிச்சமாகவும் மற்றப் பக்கம் எப்பொழுதும் இருளாகவும் இருக்கின்றன.

சனி: இதன் குறுக்களவு 73,000 மைல். இது சூரியனிலிருந்து 886,000,000 மைல் தூரத்தில் இருக்கின்றது. இதனைச் சுற்றியிருக்கும் வளையத்தின் குறுக்களவு 173,000 மைல். வளையம் 50 மைல் தடிப்புள்ளது. இதற்கு ஒன்பது சந்திரர்கள் உண்டு. சனி தன்னைத் தானே 10 1/4 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது.

சாகிரடீஸ்(கி.மு.468): இவர் கிரேக்க தத்துவஞானிகளுள் பேர் போனவர். இவர் தடித்த உதடும் தட்டை மூக்கும் மிதந்த கண்ணுமுடைய அவலட்சன புருடர். இவர் மனைவியின் பெயர் சாந்தப்பை. அவள் மிகவும் வாய்க் காரி. சாகிரடீஸ் மிகவும் பொறுமையுள்ளவர். ஒருமுறை அவர் மனைவி பாத்திரங்கழுவிய நீரை அவர் தலையில் ஊற்றினாள். சாகிரடீஸ் இவ்வளவு முழக்கத்துக்கு இவ்வளவு மழைதானோ என்று சொன்னாராம். இவர் ஒரு நூலையும் எழுதி வைக்கவில்லை. மாணாக்கருக்குப் போதங்கள் செய் தார். நகரத்திலுள்ள கடவுளை வணங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டப் பட்டு நீதிபதியால் இவர் நஞ்சு உண்ணும்படி கட்டளையிடப்பட்டார். இவர் சாந்தமாக நஞ்சை அருந்தி இறந்தார்.

சூரிய கிரகணம்: சந்திரன் தனது பாதையில் பூமியைச் சுற்றி வரும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகின்றது. இவ்வாறு வந்து அது சூரியனுடைய ஒளியைப் பூமியில் விழாது மறைக்கும்போது சூரிய கிரகணம் உண்டாகின்றது. எப்பொழுதும் சந்திரன் நேரே வரமாட்டாது. சில சமயங்களில் உயர்ந்தும் சில சமயங்களில் பதிந்தும் செல்லும். சூரிய கிரகணம் பகற் காலத்தில் நிகழும்.

சூரியனின் ஒளி: சூரியன் பூமியினும் 330,000 மடங்கு பெரியது. அதன் ஒளி பூரண சந்திரனின் ஒளியிலும் 579,000 மடங்கு அதிகமானது.

சூரியன்: சூரியன் பிரமாண்டமான நெருப்புக்கோளம். அது ஒரு இடத்தில் நின்று கொண்டு தன்னைத் தானே சுற்றுகின்றது. அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 25 1/2 மணி நேரம் ஆகின்றது.

சூரியன் மத்திய இரேகைக்கு நேரே வரும் காலம்: பங்குனி (March) 22ந் தேதியும் புரட்டாசி (Septemper) 22ந் தேதியும் சூரியன் மத்தியரேகைக்குச் சரி நேரே வருகின்றது. அக்காலத்தில் எல்லாத் தேசங்களிலும் இராப் பகல் சமமாயிருக்கும். பங்குனி முதல் ஆனிவரையும் சூரியன் வடக்கே செல்வது போல் தோன்றும். ஆனி 22க்குப் பின் தெற்கே வருவது போல் தோன்றும். மார்கழியில் மறுபடியும் வடக்கே திரும்பி பங்குனி 22உ உச்சிக்கு மேல் வரும்.

சூரியனில் காணும் மறுக்கள்: தூர திருட்டி கண்ணாடியாற் பார்க்கும்போது சூரியனில் கறுப்பு மறுக்கள் காணப்படுகின்றன. சூரியனின் உட்பாகத்தி லிருந்து வெளியே வரும் ஆவிப் படலங்களே இம் மறுக்கள் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். சில மறுக்கள் 100,000 மைல் குறுக்கள வுள்ளனவாகக் காணப்படுகின்றன. 1905ஆம் வருடம் தோன்றிய மறு 40 பூமிகளை ஒரு முறையில் விழுங்கக்கூடிய பருமை உடையதாயிருந்தது. 11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனுடைய மறுக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அக் காலத்தில் கோடையில் அதிக மழை பெய் கின்றது.

செல்வர்கள் போல ஏழைகள் உடுத்தக்கூடாது: இங்கிலாந்திலே மூன்றாம் எட்வர்ட் அரசன் காலத்தில (கி.பி. 1327-1377) செல்வர்கள் அணிவது போன்ற உடையை மற்றவர்கள் உடுத்தல் கூடாதெனச் சட்டம் உண்டாக் கப்பட்டிருந்தது. சட்டத்துக்கு மாறாக அணிவோரின் உடைகள் பறிக்கப்பட்டன.

தோற்றவளர்ச்சிக் கொள்கை: உலகில் வாழும் பிராணிகளெல்லாம் ஒன்றி னின்று ஒன்று படிப்படியே வளர்ச்சியடைந்தன வென்று கூறி ஒவ்வொரு பிராணிக்கும் அடுத்தபடியிலுள்ள பிராணிகளுக்குள்ள ஒற்றுமைகளைக் இக்கொள்கையினர் ஆராய்ந்து காட்டுவர். இவர்கள் கொள்கையின்படி மனிதன் வாலில்லாக் குரங்கினின்றும் தோன்றினான்.

நட்சத்திரங்களின் எண்: பெரிய தொலைவு நோக்கி ஆடி (துர திருட்டிக் கண்ணாடி) யைக் கொண்டு நிழற்படம் பிடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் 30,000,000,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நட்சத்திரம் போன்று தெரியும் கிரகங்கள்: நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் நிற்கின்றன. நட்சத்திரங்கள் போன்று தெரிவனவற்றின் சில , பூமி போன்ற கிரகங்களாகும். அவைகளின் ஒளி சிவப்பாக இருக்கும்.

நட்சத்திரங்களும் தமது பாதைகளில் சுற்றி வருகின்றன: நட்சத்திரங்கள் தமது பாதைகளில் சுற்றி வருவதை நூறு ஆண்டுகள் கவனித்தாலும் அறிய முடியாது. சூரியன் தன்னைச்சுற்றி வரும் கிரகங்களுடன் நொடிக்கு 200 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கின்றது. அது தனது பாதையைச் சுற்றி வர 250,000,000 ஆண்டுகளாகும் என்று கணக்கிடப் படுகின்றது. இவ்வாறு சூரியன் இலட்சக்கணக்கான முறை சுற்றி வந்த தென்று சிலர் கூறுவர். வேறு சிலர் கோடிக்கணக்கான முறை சுற்றி வந்திருக்கிறதென்று கூறுகின்றனர்.

நிலத்தின் அடியில் வெப்பத்தைச் செலுத்தும் முறை: நிலத்துக்குக் கீழே வெப்பத்தைச் செலுத்தி அறைகளைச் சூடாக்கும்முறை உரோமரால் அறியப்பட்டிருந்தது. உரோமர், பலி பீடத்திலுள்ள நெருப்பின் சூட்டை, குழாய்கள் வழியாகச் செலுத்தி வாயுவை அகலச் செய்து உலோகத்தாற் செய்த கிளிகளைப் பாடும்படி செய்தனர். வேறு முறைகளால் குருமார் விக்கிரகங்களை அசையும்படி செய்தனர். அலக்சாந்திரியாவிலிருந்த ‘செரபிஸ்’ என்னும் ஆலயத்தில் விக்கிரகத்தைக் கீழே இருந்து மேலே தூக்கக் கூடியதாகக் காந்தம் வைக்கப்பட்டிருந்தது.

நெப்தியூன்: இது ஒரு கிரகம்; இது சூரியனைச் சுற்றி வர 165 வருடங்கள் பிடிக்கின்றன.

பண்டமாற்று: நாணயங்கள் அடிக்கப்படுவதன் முன் வாணிகம் பண்டமாற் றாக நடைபெற்றது. ஆஸ்திரேலிய பழங்குடிகள் காவி நிறமண்ணைப் பெறும் பொருட்டுக் கோடரி செய்யும் கற்களை நூற்றுக் கணக்கான மைல்களுக்குச் சுமந்து சென்றனர். பழைய காலத்தில் தோல், சிப்பி, திமிங்கிலப் பல், சிவப்பு இறகு, உப்பு முதலியவை நாணயங்கள் போற் பயன்பட்டன.

புலியின் தோல் வரியுடைய தாயிருப்பதேன்: புலியின் தோல் மஞ்சள் நிறமும் கறுப்பு வரியும் உடையதாயிருக்கின்றது. புலியால் வேட்டை யாடப்படும் மிருகங்கள் அதனைப் புற்களுக்கூடாகப் பார்க்க முடியா திருத்தற்கு அதன் வரியும் நிறமும் வாய்ப்பாக இருக்கின்றன.

பிக்மியர்: ஆபிரிக்காவில் பிக்மியர் என்னும் காட்டுச் சாதியினர் காணப்படு கின்றனர். ஆண்கள் நான்கு அடி உயரமாகவும் பெண்கள் சிறிது குறை வாகவும் இருப்பர். அவர்களின் நிறை 80 இராத்தல் வரையிலாகும்.

பூமி: பூமி ஆதியில் நெருப்பு உருண்டையாயிருந்து குளிர்ந்து உயிர்கள் வாழ்தற்கு ஏற்றதாக மாறினது. அது தன்னைத் தானே இருபத்து நான்கு மணி நேரத்திற் சுற்றும்; சூரியனை 365 1/4 நாளில் சுற்றி வரும். அது சூரியனினிலிருந்து 93,000,000 மைல் தூரத்திலுள்ளது. உருண்டை வடிவினது. துருவ முனைகள் சிறிது தட்டையானவை. பூமி உருண்டை என்பதைக் கப்பல் வரும் போது. பாய்மரம் முதலில் தெரிந்து பின் அடிப் பாகங் தெரிவதாலும் கப்பல் செல்லும் போது அடிப்பாகம் மறைந்து பின் பாய்மரம் மறைவதாலும் அறியலாம்.

பூமியினுள் நெருப்பு: பூமியின் கீழ் இரண்டு மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும்.

பூமியில் முக்காற்பங்கு கடல்: பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட மூன்று பங்கு கடலும் ஒரு பங்கு நிலமுமாயுள்ளன. பூமியின் முழு நிலப்பரப்பும் 196,000,000 சதுர மைல். அதில் 141,000,000 சதுர மைல் கடலும் 55,000,000 சதுரமைல் நிலமுமாகும்.

பூமியின் மேற்படலம்: இப் பூமியின் மேற்பாகத்தில் 13,000 அடி அல்லது 24 1/2 மைல்களுக்குத்தான் பூமியின் மேற்படலம் இருக்கின்றது. அதன் கீழ் நெருப்பு இருக்கின்றது. நிலத்தை வெட்டும்போது காணப்படும் படலங்களைக் கொண்டு நில நூலார், பூமியின் வயதைக் கணக்கிடுவர். (1) மேலே 600 அடிகளும் குவாட்டினரி என்றும் (2) அதன் கீழ் 3000 அடிகளும் டெரிட்டிரியரி என்றும் (3) அதன்கீழ் 15,000 அடிகள் செக்கண்டரி அல்லது மெஸ்சோ சோயிக் என்றும் (4) அதன் கீழ் 12,000 அடிகள் பிரைமரி அல்லது பலோசோயிக் என்றும் (5) அதன் கீழ் ஆக்கோ லிதிக் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன. இவை பின் 15 காலப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காலப் பகுதியிலும் பல வகையான பிராணிகள் வசித்தன என்றும் குவாட்டினரிப் பகுதியின் பிற்காலத்திலேயே மனிதர் தோன்றினார்களென்றும் நில நூலார் ஆராய்ந்து கூறுவர்.

பூமி அதிர்ச்சி: நிலத்துக்குக் கீழ் நெருப்பு இருக்கிறது. பூமியின் உட்புறம் குளிர்ந்து சுருங்கும்போது பூமி அதிர்ச்சி உண்டாகின்றது. பூமி அதிர்ச்சிக் காலங்களில் புகையிரதம் ஓடுவதுபோன்ற சத்தம் அல்லது தொலைவில் முழங்குவது போன்ற சத்தம் பூமியின் கீழ் உண்டாகும். அப்பொழுது கடல்திரை மிக உயர எழுந்து வெகுதூரம் செல்லும்.

பூமிக்கு 7 மைல்களுக்கு மேல் மூச்சு விட முடியாது: பூமிக்கு மேலே உயரச் செல்லச் செல்ல மூச்சு விடுதல் வருத்தமாகும். காற்று அங்கு நெருக்கம் இல்லாமல் இருக்கும். மேலேயிருந்து கீழே வர வரக் காற்று நெருக்கமுள்ளதாயிருக்கும். பூமியைச் சுற்றிக் காற்று 54 முதல் 84 மைல் வரைக்கும் இருக்கலாமென்று சொல்லப்படுகின்றது.

பூமி, மத்திய இரேகையில் சுழலும் வேகம்: பூமி மத்திய இரேகையில் செக்கண்டுக்கு 5000 கஜம் அல்லது மணியில் 1000 மைலுக்கு மேல் சுழல்கின்றது. பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் மணிக்கு 68000 மைல் பிரயாணஞ் செய்கின்றது. பூமி மேற்கிலிருந்து கிழக்கே சுழல் கின்றது. அது 23 பாகை சரிந்து செல்கின்றது.

மக்கட் பிரிவு: உலகில் மக்கள், நோடிக். அல்பைன் மத்திய தரை என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மறுபடி மஞ்சள், கறுப்பு, வெள்ளை, கபிலை, சிவப்பு நிறச் சாதிகளாகப் பிரிக்கப் படுவர். இவ்வைந்து நிறங்களும் மங்கோலியர், நீகிரோவர், காகேசியர் என மூன்று பிரிவுகளில் அடங்கும். இம் மூன்றும் பின் பல சிறு பிரிவு களாகப் பிரிக்கப்படும். சாதிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் தலை, மயிர் உறுப்புக்களின் அமைப்பு, நிறம் என்பவற்றைக் கவனித்தல் சிறந்தது.

மனிதனின் உடை: ஆதிகால மனிதன் உடம்புக்குப் பாதுகாப்பாக உடை அணிந்தான். உடைகளின் இயல்பு நாட்டின் வெப்பநிலையைப் பொறுத் திருந்தது. குளிர் தேசங்களில் வாழ்ந்தோர் உடம்போது ஒட்டக்கூடிய இறுக்கமான உடை அணிந்தனர். சூடான தேச மக்கள் தளர்ந்த உடை தரித்தனர்., இவ் வுடைகளை அழகாக தைத்து அணியும் முயற்சிகள் செய்யப்பட்டன. இவ்வாறு மனிதர் அலங்காரமாக உடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. படை எடுப்புக் காலங்களில் ஒரு சாதியார் இன் னொரு சாதியாரை வெற்றி கொண்டனர். அப்போது வென்ற சாதியாரின் உடைகளையும் பழக்க வழக்கங்களையும் வெல்லப்பட்ட சாதியார் பின்பற்றினர். இன்று நடப்பதும் அதுவே.

மனிதனின் எலும்புகள்: மனித உடலில் 208 எலும்புகள் இருக்கின்றன.

மனிதரின் சுவாசம்: வளர்ந்த மனிதன் நிமிடத்தில் 16 முதல் இருபது முறை சுவாசிக்கின்றான். குழந்தைகளும் காய்ச்சற்காரரும் இதினும் அதிகமாகச் சுவாசிக்கின்றனர். ஒரு மனிதன் தனது சீவிய காலத்தில் அறுபது வயதில் 508,000,000 சுவாசங்களை இழுத்திருக்கின்றான். அக் காற்றின் அளவு 9,600,000 கன அடியாகும். மனிதனின் உடம்பில் 2,000,000 மயிர்த் துவாரங்கள் இருக்கின்றன. ஒரு சதுர அங்குலத்தில் 500 துவாரங்கள் உண்டு. உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் இதிலும் நாலு மடங்கு அதிகம் இருக்கின்றன. ஒரு மனிதனுடைய தாடி ஒரு வருடத்தில் ஆறு அங்குலம் வளரும்.

மின்னலின் வேகம்: மின்னல் ஒரு நொடியில் (செக்கண்டில்) 186,000 மைல் பாய்கின்றது. இடி 1/8 மைலை மூன்று நொடியில் கடக்கின்றது.

மீனெண்ணெய்(Cod liver Oil) இது நார்வே, நியூபௌண்டுலந்து முதலிய தேசங்களில் கிடைக்கின்றது. இது காட் என்னும் ஒரு வகை மீனின் பித்தப்பையை (Liver) நீரிலிட்டு அவிக்கும்போது மேலே எழும் எண்ணெய். நிறமும் சுவையும் இல்லாததே சுத்தமான எண்ணெயாகும். இது உடம்பை வளர்க்கும் சத்து நிறைந்தது.

முட்டாக்கிடும் ஆடவர்: சகாரா வனாந்தரத்திலே எயர் மலையில் துவாரெக் (Tuareg) என்னும் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஆடவர் முக்காடு இட்டுக்கொள்வர். பெண்கள் முக்காடு இடுவதில்லை. அவர்கள் முக்காடு இடும் துணி நீல நிறமுடையது. அதற்கு ஏற்ற துணி சூடானில் செய்யப் படுகின்றது. கண்ணையும் வாயையும் மூக்கையும் மறைக்கும் மூடிபோல இது அணியப்படுகின்றது. வெளியே சிறு துவாரங்கள் விடப்படுகின்றன. துவாரங்களால் வேறு பகுதிகள் தெரியமாட்டா.

முதல்முதல் ஆகாயத்திற் பறந்த மனிதன்: முதல்முதல் ஆகாயத்திற் பறந்தவர் ‘பைலாரர்டி ரோசியர்’ என்பவர். 74 அடி உயரமும் 48 அடி குறுக் களவுமுள்ள ஓர் புகைக் கூண்டு செய்யப்பட்டது. அதன் கீழ்ப்பாகம் 16 அடி அகலமுடையதாயிருந்தது. அதன் கீழே இரும்புக் கம்பியில் இரு பந்தங்கள் வைக்கப்பட்டன. சூடான காற்றை உள்ளே செலுத்துவதற் காகவே இவ்வாறு செய்யப்பட்டது. கூடு மேலே விடப்படுமுன், ‘ரோசியர்’ இருநூறு அல்லது முந்நூறு அடிகளுக்கு மேலே எழும்பினர். கூடு மேல் எழும்பாதபடி கயிறுகள் கட்டி இழுக்கப்பட்டன. ரோசியரும் இன்னொரு வருமாகப் புகைக் கூண்டிற் பிரயாணஞ்செய்தனர். கூண்டு 3000 அடி மேலே கிளம்பி வானத்தில் 25 நிமிடம் நின்றது. ‘ஹைட்ரோசின்’ வாயு சாதாரண வாயுவிலும் 1/14 பங்கு குறைந்த கனமுடையதென்று கண்டு பிடிக்கப்பட்டது. ‘ஹைட்ரோசின்’ (Hydrogen) வாயு நிறைக்கப்பட்ட கூண்டு பரீட்சிக்கப்பட்டது. அதனைப் பார்க்க 100, 000 மக்கள் கூடி யிருந்தார்கள். அது 3,123 அடி உயரப் பறந்து 3/4 மணி நேரம் வானத்தில் நின்றது. விட்ட இடத்திலிருந்து 15 மைல் தூரத்திலுள்ள கிராமத் தோட்டத் தில் இறங்கினபோது கிராம வாசிகள் திகில் கொண்டு அதனைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்தனர்.

முத்தரையர்: கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை யில் தமிழ் நாட்டின் சில பகுதிகளை ஆண்ட சிற்றரசர். இவர்களைப் பற்றி நாலடியாரில் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆதலினாலேயே, நாலடியார் எட்டாம் நூற்றாண்டு வரையிற் செய்யப்பட்ட நூல் எனக் கருதப்படுகின்றது.

மொசார்ட்(Mozart): இவன் சாஸ்பேக் என்னும் இடத்தில் 1756இல் பிறந்த சேர்மனியன். இவன் தனது மூன்றாவது வயதில் தனக்கு ஐந்து வயது மூப்பாயிருந்த தமக்கையிடத்தில் பியானோ வாசிக்கப்பயின்றான். நாலாவது வயதில் அவன் பியானோ வாசித்ததோடு சிறு பாடல்களும் செய்தான். ஐந்தாவது வயதில் இவன் பல்கலைக் கழகத்தில் இசை பாடினான். 1762இல் இவன் தந்தை, இவனையும் இவன் தமக்கையையும் கொண்டு சுற்றுப் பிரயாணஞ் செய்தான். மொசார்ட்டும் அவன் தமக்கையும் சேர்மன் அரசர்கள் முன்னிலையில் பல முறை பாடினார்கள்.

வால் வெள்ளி: வான வீதியில் 120,000 வால் வெள்ளிகள் சஞ்சரிக்கின்றன என்று கருதப்படுகின்றது. இவை கிரகங்களைப் போலத் தமது பாதை களில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளின் வால்கள் பல ஆயிரம் மைல் நீளமுடையன. வால் போலத் தெரிவது எரியும் வாயு. வால் வெள்ளிகள் சூரியனைச் சுற்றி வரும்பாதை நீண்ட வட்ட (முட்டை) வடிவினது.

விமானம் தூக்கிக் கப்பல்: (Air craft carrier): இது சாதாரண போர்க் கப்பலினும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடியது. தன்னை விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தக்கது. சாதாரண போர்க் கப்பல், ஒன்று அல்லது இரண்டு விமானங்களை மாத்திரம் கொண்டு செல்ல முடியும். அவை போர்க்கப்பலின் அடித்தளத்தினின்றும் பறந்து செல்லும். திரும்பி வரும்போது அவை கடலில் இறங்கும். அப்பொழுது கப்பலை நிறுத்தி அவைகளை மேலே தூக்கி எடுக்க வேண்டும். விமானம் கொண்டு செல்லும் கப்பல்களில் விமானங்கள் கப்பல் ஓடும் போதே பறக்கவும் இறங்கவும் முடியும். இதற்காக மேலே தளம் இடப்பட் டிருக்கும். விமானங்கள் கீழ்த் தட்டில் இருக்கும். பறக்க வேண்டியபோது அவை மேலே தூக்கி எடுக்கப்படும். விமானங்களுக்கு மடிக்கக் கூடிய செட்டைகள் உண்டு. இவ்வாறிருப்பது கப்பலில் இடவசதி பெறுவதற் காகவாகும். ஒரு கப்பல் நாற்பது விமானங்களுக்கு அதிகம் கொண்டு செல்லும்.

விளக்கெண்ணெய்: ஆமணக்கு முத்துக்கொட்டையிலிருந்து விளக்கெண் ணெய் எடுக்கப்படுகின்றது. முற்காலத்தில் இவ்வெண்ணெய் விளக் கெரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆகவே அது விளக்கெண்ணெய் எனப்பட்டது. ஆமணக்கு விதைகளைத் துவைத்து வெந்நீரில் இட்டுக் கொதிக்கச் செய்து எண்ணெய் எடுக்கப்படும். கொதிநீரில் எண்ணெய் மிதக்கும்.

வியாழன்: எல்லாக் கிரகங்களிலும் வியாழன் பெரியது. இதன் குறுக்களவு 88,000 மைல். இது சூரியனிலிருந்து 483,000,000 மைல் தொலைவில் இருக்கின்றது. சூரியனைப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை யும் தன்னைத் தானே 9 மணி, 55 நிமிடம் 26 நொடியில் சுற்றி வருகின்றது. இதற்கு ஒன்பது சந்திரர்கள் உண்டு.

வியபிசாரம்: உலகம் முழுவதிலும் வியபிசாரக் குற்றத்துக்குத் தூக்குப் போன்ற கொடுந்தண்டனை விதிக்கப்பட்டது. யூதர் இக் குற்றத்துக்கு மரணதண்டனை விதித்தனர். உரோமில் பெண்ணின் பெற்றோர் அல்லது கணவனின் விருப்பத்தின்படி தண்டனை விதிக்கப்பட்டது. கான்ஸ்டான் டியஸ், ளுட் பேர் போனவர். தடித்த கான்ஸ்டன் (Constantius and Constans) காலத்தில் வியபிசாரிகள் எரிக்கப்பட்டார்கள். அல்லது சாக்கிலிட்டுத் தைத்துக் கடலில் எறியப்பட்டார்கள். பழைய பிரான்சில் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஸ்பெயினில் அங்கங்களைக் களைந்தார்கள்; பாபிலோ னில் ஆற்றில் எறிந்தார்கள். இந்தியாவின் சில பாகங்களிலும் இவ்வகை வழக்கிருந்ததென்பது பெருங்கதையில் வரும் சாங்கியத் தாயின் வரலாற்றாலறியலாம். கால் கைகளை வெட்டிவிடுவதும், மலையிலிருந்து தள்ளி வீழ்த்திக் கொல்வதும், செங்கல்லைத் தலையில் வைத்து நகரைச் சுற்றி வரச் செய்வதும் நகர்ப்புறத்தே துரத்திவிடுவதும் போன்ற தண்டனைகளுமிருந்தன.

வெள்ளி: இது பூமியிலும் சிறிய கிரகம். இது சூரியனை 255 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. இதனைச் சூழ இருக்கும் காற்று நெருக்க மாக இருப்பதால் இது சூரிய ஒளியை நன்றாகப் பிரதி பிம்பிக்கின்றது. தன்னைத் தானே 23 1/2 மணி நேரத்தில் சுற்றி வருகின்றது.

வெள்ளை நிறம் கொடுக்கும் தூள்:- (Black Powder) இது சுண்ணாம்புக்கு மேல் குளோரைன் (Clorine) என்னும் வாயுவைப் பலமுறை செலுத்துவ தால் செய்யப்படுகிறது. இத் தூளினால் துணிகள் வெள்ளையாக்கப் படுகின்றன.

வெல்ற்(Felt): தைக்காததும் நெசவு செய்யப்படாததுமாகிய ஒருவகைத் தொப்பியை பலர் தரிப்பதைக் காண்கிறோம். இது வெல்ற் தொப்பி எனப்படுகிறது. இது கம்பளியை நன்றாக நெருக்கி இயந்திரத்திலிட்டு அடித்துச் செய்யப்படுகின்றது.

யசுர் வேதமும் சாம வேதமும்: இவ்வேதங்கள் இருக்கு வேதத்தையே ஆதாரமாக உடையன. வெவ்வேறு சமயச் சடங்குகளில் ஓதுதற்கு இருக்கு வேதத்தினின்றும் எடுத்துத் திரட்டப்பட்ட பாடல்களே யசுர், சாமம் என்னும் பெயர் பெறுகின்றன.

ஸ்ட்ராபோ B.C. 65-25 A.D. இவர் ஓர் கிரேக்கர். அகஸ்தஸ் என்னும் உரோமா புரி சக்கரவர்த்தி காலத்தில் வாழ்ந்தவர். இவர் 17 பகுதிகள் அடங்கிய பூமி சாத்திர நூல் எழுதினார். அவர் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிட் டிருக்கின்றார்.

ஆப்பிரிக்க கட்டழகி: இவள் ஆப்பிரிக்கா விலே சாரா (Sara) என்னும் நீகிரோவ வகுப் பினரின் கட்டழகி. இவள் தனது இரண்டு இதழ்களையும் துவாரம் செய்து மரத்தினால் செய்த இரண்டு செயற்கை இதழ்களை இதழ் களில் வைத்துத் துவாரங்களில் குச்சிகளை வைத்துப் பொருத்தி யிருக்கின்றாள். இவ் வாறு தன்னை அலங்கரித்துக் கொள்ப வளே சிறந்த கட்டழகியாகக் கருதப்படுகின் றாள். தென்னிந்தியாவில் காதைத் தொள் ளல் செய்து நுங்குக்குலைகள் போன்ற ஒரு வகை அணிகளைத் தொங்க விடுவது சிலரால் கட்டழகு என்று கருதப்படுகின்றது. வேறு சிலர் தொள்ளல் செய்த காதில் தோளளவும் நீளும்படி கனத்த ஈய வளையங்களைத் தொங்க விடுவதை அழகாகக் கருதுகின்றனர்.

டெலிபோன்: அலக்சாந்தர் கிரகம்பெல் (Alexander Graham Bell 1847-1922) என்னும் ஆங்கிலர் டெலிபோனைக் கண்டுபிடித்தார். 1876இல் முதல் முதல் டெலிபோன் பேசப்பட்டது.

பாரசூட்: 1793இல் ஒரு பிரான்சிய தளபதி ஆஸ்திரிய இளவரசன் ஒருவனால் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டான். அவன் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு உயரமான கட்டடத்திலிருந்து குதித்தோட முயன் றான். அவன் இதில் வெற்றி பெறவில்லை. கால் முறிந்துவிட்டது. பிளஞ் சாட் என்னும் ஒருவன் 1785இல் ஒரு பாரசூட்டை முதன் முதற் செய்தான். அவன் புகைக் கூண்டில் பிரயாணஞ் செய்யும் போது பாரசூட்டில் ஓர் கூடையைக் கட்டி அதில் நாயை வைத்துக் கீழே விட்டான். அது காயப் படாமல் கீழே இறங்கிற்று. கரனியன் என்னும் ஓர் பிரான்சுக்காரன் 1802ல் புகைக் கூண்டில் இலண்டனுக்குப் பிரயாணஞ் செய்து பாரசூட்டில் இறங்கினான்.

பாணினி: இவர் வடமொழிக்கு இலக்கணஞ் செய்தவர். இவர் காலம் கி.மு. 400 வரையில். இவர் காலம் கி.மு. 800 என்று கூறுவாருமுளர். அதனை பெரும்பாலும் சரித்திரக்காரர் ஏற்றுக்கொள்வதில்லை. பாணினி செய்த இலக்கணம் பாணினீயம் அல்லது அட்ட அத்தியாயி எனப்படும். இதில் ஓரிடத்தில் யவனரைப் பற்றிக் கூறப்படுகின்றது. அலக்சாந்தருக்குப் பின்பே யவனர் என்னும் சொல் இந்தியாவில் வழங்கிற்று. ஆகவே பாணினியின் காலம் கி.பி. 4ம் நூற்றாண்டு எனத் துணியப்படுகின்றது.

பிளாட்டோ: (Plato) கி.மு. 429: இவர் சாகரிடீஸின் மாணவர். இவருக்கு 28 மாணவர் இருந்தனர். இவர் கணித வல்லார். கி.மு. 347இல் மரித்தார். இவர் எல்லாப் பிராணிகளுக்கும் உயிர் உண்டென்றும், விருப்பத்தினால் நியாயமும், நியாயத்தினால் தீர்ப்பும் உண்டாகின்றதெனக் கூறினார்.

மகமது நபி: கி.பி. 570-632) இவர் மெக்காவில் ஓர் ஏழைக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தாய் தந்தையர் இளமையில் மரணமாயினர். இவர் தன் மாமனாருடன் இருந்து வளர்ந்து வந்தார். இவர் கதீனாஎன்னும் விதவை யின் ஒட்டகங்களை ஓட்டிச் செல்லும் வேலையில் அமர்ந்தார். இவர் நேர்மையாக நடந்தமையின் ஒட்டகக் கூட்டத்தாருக்கெல்லாம் தலைவ ரானார். கதீனா இவரை மணந்தாள். இவர் கபிரியேல் என்னும் தேவதூதன் தனக்குக் கூறிய உண்மைகளை மக்களுக்குப் போதித்தார். அப் போதனைகளடங்கிய நூல் குர்ஆன் எனப்படும். மெக்காவில் எதிரிகள் இவரைக் கொல்ல முயன்றனர். ஆகவே இவர் மெடினாவுக்கு ஓடிச் சென் றார். இது கி.பி. 622இல் இதிலிருந்து மகமதிய வருடம் ஆரம்பிக்கும்.

அறியன்: (Arrian) கி.பி. 90-170 இவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த கிரேக்க சரித்திராசிரியர். இவர் மகா அலக்சாந்தரின் படையெடுப்பைப் பற்றி ஏழு பாகங்களடங்கிய ஒரு புத்தகம் எழுதினார்.

ஆட்ச்மிடீஸ்: (கி.மு. 298-212) இவர் ஒரு கிரேக்கர். இவர் கணித வல்லுநரா யிருந்ததோடு இயந்திரங்கள் செய்யவும் புதிதாகக் கண்டு பிடித்தார். ஆட்ச்மிடீசின் சங்குப்புரி(ஆச்மிடீஸ் ஸ்குரூ) என்னும் தண்ணீர் இறைக் கும் இயந்திரம் இவரால் கண்டு பிடிக்கப்பட்டது. கிரேக்க தேசத்தின் மீது படை எடுத்து வந்த கப்பல்களை இயந்திரங்களின் உதவியால் இவர் அழித்தார். கண்ணாடிக் கூடாகச் சூரிய கிரணத்தை ஒடுக்கி ஓர் முனை யிற் பாயும் படி செலுத்திக் கடலில் வரும் கப்பல்களுக்குத் தீமூட்டினார் என்று சொல்லப்படுகின்றது. கிரேக்கர் மீது படை எடுத்து வந்த உரோம படைத்தலைவன் ஆட்ச் மிடீசைக்கொல்லாது உயிரோடு பிடித்து வரும் படி தனது ஆட்களுக்குக் கட்டளையிட்டான். ஆட்ச்மிடீஸ் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவரை யாரென்று அறியாத ஒரு உரோமைப் போர் வீரன் அவர் தலையைக் கொய்து விட்டான்.

அரிஸ்டாட்டல்: (Aristotle கி.மு.384-322) இவர் பிளாற்றோவின் மருமகன். இவர் மகா அலெக்சாந்தரின் ஆசிரியர். இவர் முதல் பிராணி நூல் எழுதியவராவர்.

ஆங்கில கோமர்: ஜhன் மில்டன் (John Milton 1608-1674) என்னும் கவி கோமர் எனப்படுவார். இவர் கோமர் போலவே குருடராகவிருந்து தனது 50 வயதில் கவிபாட ஆரம்பித்தார். இவர் செய்த சுவர்க்க நீக்கம்,சுவர்க்கப் பேறு முதலிய நூல்கள் (pradise lost and paradise regained) சிறப்புடையன. கெர தோதஸ் தன் காலத்துக்கு 400 ஆண்டுகளின் முன் கோமர் என்னும் மாகவி இருந்தார் எனக் கூறியிருக்கின்றார்.

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர்: டாக்டர் வில்லியம் ஹர்வே (Dr.William Harway 1678-1757) என்னும் ஆங்கிலர் இரத்தம் இருதயத்தி லிருந்து பரவுகின்றதென்பதைக் கண்டுபிடித்தார்.

கம்பியில்லாத் தந்தி கண்டுபிடித்தவர்: கல்லி எல்மோ மார்கோனி (Gulielmo Marcomi 1874-1937) கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார். ரேடியோவைக் கண்டுபிடித்தவரும் இவரே. இவர் இத்தாலியர்.

கலிலியோ: கலிலி. கி.பி. (1654-1642) இவர் இத்தாலியிலே பைசா நகரிற் பிறந்தார் தொலைவு நோக்கித் கண்ணாடியைக் கண்டுபிடித்தவரிவரே. இவர் சூரியன் பூமியைச் சுற்றி வருகிற தென்னுங் கொள்கையை மறுத்துப் பூமி சூரியனை சுற்றி வருகிற தெனக் கூறினார். அரசினர் இதற்காக இவருக்குச் சிறைத் தண்டனை விதித்தனர்.

கலிவரின் பிரயாணங்கள்: (Gulliver’s travels) இந்நூல் ஜோநதான் சுவிப்ட் (Jonathan Swift 1667-1745) என்பவரால் எழுதப்பட்டது. இது குறிப்புப் பொருள் பொதிந்த கற்பனைக் கதை. இதிற் கூறப்படும் குள்ளரும் இராக்கதரும் முறையே அவ்விருகட்சிகளுக்கு முரியோராவர்.

கொன்பியூ சஸ்: (கி.மு. 550-479) இவர் சீனர்களின் தத்துவஞானி இவர் மக்கள் ஒழுக்கம் அரசியல் என்பவைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். இவர் போதனை சீனா தேசம் முழுமையிலும் கைக்கொள்ளப்பட்டது. இவர் கொள்கையைக் கொண்ட மதம் கொன்பியூசஸ்மதம் எனப்படுகின் றது. புத்தர் இந்தியாவிலே தனது கொள்கைகளை மக்களுக்குப் போதிக் கும் காலத்தில் இவர் சீனாவில் இருந்தார்.

சாணக்கியர்: இவர் சந்திரகுப்த மயூரனுக்கு (கி.மு. 322-298) மந்திரியாக விருந்தார். இவர் காஞ்சீபுரத்துப் பிராமணர். இவர் கௌடலியர் எனவும் அறியப்படுவர். இவர் வடமொழியில் பல நூல்கள் செய்துள்ளார். அவைகளுள் அர்த்த சாஸ்திரம் சிறப்புடையது.

டார்வின்: (Darwin) 1809-1882 இவர் பெரிய உயிர் நூற் புலவர். உயிர்த் தோற்ற வளர்ச்சி (Evolution) கொள்கையை உலகுக்கு நன்கு எடுத்து விளக்கியவர். ஆதியிற் கடலிற் தோன்றிய நட்சத்திரமீன் போன்ற பிராணிகளே காலத் தில் வளர்ச்சியுற்றுக் கரைவாழ் பிராணிகளாகி மனிதர் வரையில் வளர்ச்சி யுற்றனவென்றும் மனிதர் தோன்றுவதற்கு அடுத்த கீழ்ப் படியிலுள்ளது குரங்கு என்றும் கூறுவர். இவர் கொள்கையை அந்த காலத்தில் பலர் மறுத் தனர். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று கூறுதல் சட்ட விரோதம் என்னும் பிரமாணம் இன்றும் அமெரிக்காவிலுள்ளது.

சர் சகதீஸ் சந்திரபோஸ்: (1858-1938) இவர் தாவரங்களுக்கு உயிர் உண் டென்றும் அவைகளுக்குப் பிராணிகளுக்குப் போலவே நரம்பு ஓட்டம் உணர்ச்சி விருப்பு வெறுப்பு முதலியன உண்டென்றும் எடுத்துக் காட்டிய கீழ் நாட்டு விஞ்ஞானி.

இராபின்சன் குருசோ: இந்நூல் டானியல் டி போ (DaniealDe For 1659-1731) என்பவரால் தமது பதினாறாவது வயதில் எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஹெர தோதசு: கிரேக்க சரித்திராசிரியராகிய, ஹெரதோதசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் விளங்கினார். இவர் பாபிலோன் எகிப்து அரேபியா சின்ன ஆசியா முதலிய இடங்களுக்குப் பிரயாணஞ் செய்து வரலாற்றுக்கு வேண்டிய பல ஆதாரங்களைத் திரட்டி ஓர் நூல் எழுதியுள்ளார். அவர் இந்தியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் சரித்திரப் பிதா எனப்படுவர். புலுதாச் என்னும் வரலாற்று ஆசிரியர் கி.பி.முதல் நூற் றாண்டில் வாழ்ந்தார்.

முதல் நீராவிக் கப்பல்: எடின்பறோவிலுள்ள வில்லியம் சிமிங்டன் (William Symington) என்பவரால் 1788இல் முதல் நீராவிக் கப்பல் செய்யப்பட்டது

நிழற் படம்: (Photography) முதல் முதல் Fosc.Talat என்பவரால் 1839இல் கண்டுபிடிக்கப்பட்டது.

மிக உயரத்திலுள்ள பட்டினம்: பேரு நாட்டிலே சேர்போதி பாஸ்கோ என்னும் பட்டினம் 14,200 அடி உயரத்தில் இருக்கின்றது. அது மத்திய இரேகைக்குப் 10 பாதை தெற்கே உள்ளது. அங்கு வெப்பம் அதிகம். அங்கு வெப்ப மிகுதியால் குழந்தை பிறக்காது: மனிதர் தொகை மாத்திரம் 14,000 ; லாமா என்னும் அவ்வூர் ஆடுகள் கூடக் குட்டி போடாது. கோழி முட்டையிடாது. நல்ல சாதி நாய் கூடப் பிழைக்காது. ஆனால் வெள்ளி அகப்படுவதால் அதை வெட்டி எடுக்க 14,000 பேர் அங்கு வேலை செய்து வருகிறார்கள்.

காலம் அளக்குங் கருவி: ஆதியில் சூரியனின் நிழலைக் கொண்டு நேரம் அளக்கப்பட்டது. பின்பு நீர்க் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக் கடிகாரங்கள் முற்காலத்து நாகரிக மக்கள் எல்லோரிடையும் வழங்கின. சங்க நூல்களில் இது நாழிகை வட்டம் எனக் கூறப்பட்டுள்ளது. இக் கடிகாரங்களைப் பார்த்து நேரம் அளப்பதற்குப் வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ‘பொழுதறிந்து நுவலும் பொய்யா மாக்கள்” எனப் பட்டனர். தண்ணீர்க் கடிகாரங்களின் முறையில் மணற் கடிகாரங்களும் செய்து பயன்படுத்தப்பட்டன. கி.பி. 1000இல் நேரங் காட்டும் முள்ளுள்ள அசையக் கூடிய ஒரு வகைக் கடிகாரம் ஐரோப்பா வில் வழங்கிற்று. கி.பி. 1300இல் மணி அடிக்கும் கடிகாரம் இத்தாலி தேசத்தில் செய்யப்பட்டது. 1600இல் கலிலியோ கலிலி என்பவர் ‘பெண்டுலம்’ என்னும் தூக்கின் மூலம் இயங்கும்: கடிகாரத்தைக் கண்டு பிடித்தார். கையிற் கட்டும் கடிகாரத்தை நியுடன் பேக்கிலுள்ள பீட்டர் ஹீல் என்பவர் 1500இல் கண்டுபிடித்தார். இது அக்காலத்தில் நியுடன் பேக்முட்டைகள் எனப்பட்டன.

குதிரை இலாடன்: குதிரை இலாடன் வீட்டுக்குள் பேய் பிசாசுகளை நுழைய விடாது என்று இன்றும் இங்கிலாந்தின் சில இடங்களில் நம்பப்பட்டு வருகின்றது. ஆகவே அவர்கள் வீட்டின் முன் இறப்பில் குதிரை இலாடனைக் கட்டித் தொங்க விடுவார்கள். இந்தியாவிலும் இரும்புக்குப் பேய்பைசாசங்கள் பயம் என்று நம்பப்படுகின்றது. இரவில் தனி வழி செல்வோர் கையில் ஓர் இரும்பைக் கொண்டு செல்வது இன்றும் சில இடங்களில் வழக்கு.

பொங்கும் நீர் ஊற்றுகள்: (Artesianwells): சில தேசங்களிலே, தானே மேல் எழும் ஊற்றுகள் காணப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் துளைக்கப்படு கின்றன. துளை ஊற்றை அடைந்ததும் நீரூற்றுகள் வெளியே பல அடி தூரத்துக்கு எழும்பிக் குதிக்கின்றன. இவ்வகையான ஊற்றுக்கள் அதிகம். அஸ்திரேலியாவில் உண்டு இவ் வூற்றுகள் உயரமான இடங்களினின்றும் வந்து நிலத்தின் கீழ் பள்ளமான இடங்களிற்றேக்கி நிற்கும். அவ்விடத் தில் துவாரம் கண்டதும் தண்ணீர் தனது மட்டத்துக் எழும்புவதாலேயே இவ்வகைப் பொங்கி எழும் ஊற்றுக்கள் உண்டாகின்றன. தெற்கு நியு வேல்ஸ் (New South Wales) என்னும் இடத்திலுள்ள ஒரு ஊற்றின் ஆழம் 1783 அடி. இது 3,300,000 கலன் தண்ணீரைத் தினம் வெளியே கொட்டுகின்றது.

கிருமிகள் (germs): நீரிலும் காற்றிலும் பலவகைக் கிருமிகள் மிதக்கின்றன. இவை, தாவரங்களையும் மற்றும் உயிர் வாழ்வனவையும் போலப் பற்பல வகையின. இவற்றுட் சில தாவரங்களுக்கு நோயை உண்டாக்குகின்றன. சில மனிதருக்குத் தொற்று நோய்களை விளைக்கின்றன. நெருப்புக் காய்ச்சல், அம்மை, கோதாரி, பிளேக் போன்ற நோய்களுக்குக் காரணம் கிருமிகளே. நோய்களை விளைக்கும் கிருமிகள் அசுத்தமான இடங்களிலேயே தங்கிப் பெருகுகின்றன. ஆதலினாலேயே வீடுகளிலும் வீட்டுக்கு அண்மையிலும் அழுக்குப் பொருள்கள் இருத்தல் கூடாது என்று சொல்லப்படுகின்றது. இக் கிருமிகளை கண்களினாற் பார்க்க முடியாது. பூதக் கண்ணாடிகளினுதவியாற் பார்க்கலாம்.

இரத்தத்தில் கிருமிகள்: எல்லாக் கிருமிகளும் தீமை விளைப்பனவல்ல. சில நன்மை விளைக்கின்றன. நம் இரத்தத்தில் ஒரு வகை வெள்ளைக் கிருமிகள் இருக்கின்றன. அவை நம் சுகத்தைப் பாதுகாக்கின்றன. நம் உடம்பில் ஒரு காயம் உண்டானால் எண்ணிறந்த நோய்க் கிருமிகள் உள்ளே நுழைய முயலுகின்றன. அப்பொழுது இரத்தத்தில் இருக்கும் கிருமிகள் அவைகளை எதிர்த்துப் போராடிக் கொன்று விடுகின்றன. அழுக்கிலேயே நோய்க் கிருமிகள் தங்குகின்றன. ஆதலால் காயங் களைக் கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். குடிவகைகளைப் பயன்படுத்துவோரின் உடம்பில் வெள்ளைக் கிருமிகள் மிகக் குறைவாயிருக்கின்றன.

கிருமிகள் பாலை உறையச் செய்கின்றன: பாலைக் காய்ச்சி வைத்தால் அது மறுநாள் கட்டியாக உறைவதைக் காண்கின்றோம். இவ்வாறு செய்வது கிருமிகளே. ரொட்டிக்காரனது மாவைப் புளிக்கச் செய்வதும், குடிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்தும் நீர் மயமான பொருள்களைப் புளிப்பு உண்டாக்குவதும் இக் கிருமிகளே.

உடைகள்: கம்பளி வெப்பத்தை வாங்கி வெளியே விடாது. ஆகவே கம்பளி உடை உடம்பிலுள்ள சூட்டைக் காப்பாற்றும். சணல் உடை (லினன்) சூட்டை வெளியே விடும் இயல்பினது. ஆகவே சணல் உடை உடம்புக்குக் குளிர்ச்சியை அளிக்கும். பஞ்சு கம்பளிக்கும் சணலுக்கும் இடையிலுள்ள தன்மை வாய்ந்தது.

மகா அலக்சாந்தர் கி.மு. 356-323 இவர் கிரேக்க அரசர். இவர் பாரசீகம் பாபிலோன் எகிப்து முதலிய நாடுகளை வென்று இந்தியாமீது படை யெடுத்தார். இவர் அக்காலத்து தக்ஷசீலம் என்னும் இடத்தை ஆண்ட போறஸ் அரசனை வெற்றிகொண்டார். இவர் இந்தியாவினின்றும் திரும்பிச் செல்லும் வழியில் தனது 33-வது வயதில் பாபிலோனில் இறந்தார்.

மூன்று வயதில் பீயானோ வாசித்தார்: மோசாட்(Mozart) என்னும் கங்கேரியர் (18ம் நூற்றாண்டு) தனது மூன்றாவது வயதில் யாரிடமும் பயிலாமலே பீயானோவில் திருத்தமாக இசை வாசித்தார். மெய்கண்டார் சம்பந்தர் ஆகியோர் தமது மூன்றாவது வயதிலேயே ஞானம் பெற்றுப் பாடினார் என்று சொல்லப்படுகின்றது. இந்நிகழ்ச்சிகளை “ விட்டகுறை தொட்டகுறை’ என்பர் தமிழ் மக்கள்.

வாஸ்கோடிகாமா: போர்த்துக்கேசிய மாலுமியாகிய வாஸ்கோடிகாமா என்பவன் நன்னம்பிக்கை முனைவழியாகக் கள்ளிக் கோட்டையில் 1498இல் மே மாதம் 20ஆம் நாள் இறங்கினான். இதற்குப் பின்னரே ஒல்லாந்தர் பிரான்சியர் டானியர் (Danes) ஆங்கிலேயர் முதலியோர் இந்தியாவுக்கு வந்தனர்.

வான்மீகர்: இவர் வடமொழி இராமாயணஞ் செய்தவர். இவர் காலம் கி.மு.600 என்று கருதப்படுகின்றது. இவர் செய்த இராமாயணத்தையே கம்பர் தமிழிற் பாடினார். கம்பர் இராமாயணத்துக்கு முன், சங்க இராமாயணம் என ஒன்று இருந்ததெனத் தெரிகின்றது. அந் நூலிலுள்ள வெண்பா வொன்று யாப்பருங்கயில விருத்தியுரையில் மேற்கோளாக வந்துளது. வான்மீகர் தென்னாட்டுத் தமிழரென்றும் அவர் வடமொழியில் புலமை யுடையராய் வடமொழியில் நூல் செய்தாரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இக் காலத்தில் ஆங்கிலமொழியைக் கற்று அம்மொழியில் நூல் செய்யும் இந்தியர் பலர் காணப்படுகின்றனரன்றோ? வைத்தியா என்னும் ஆசிரியரும், வேறு சிலரும் வேதபாடல்களைச் செய்தவர்கள் பலர் கார் நிறமுடைய தமிழராய்க் காணப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

சவுக்காரம்: கொழுப்புடன் பொட்டாஷ் (potash) சேர்த்து அவித்துச் சவுக்காரஞ் செய்யப்படுகின்றது. இவ்வாறு அவிக்கும்போது கிளிசிறின் (Glycerne) என்னும் ஒருவகை இனிப்பு எண்ணெய் உண்டாகின்றது. சவுக்காரத்திலிருந்து இனிப்பெண்ணெயைப் பிரிப்பதற்குச் சாதாரண கறியுப்புப் பயன்படுத்தப்படுகின்றது.

சுத்தஞ் செய்யும் சோடா: (Washing soda) இது சாதாரண உப்பிலிருந்து விற்றியல் என்னும் ஒருவகை எண்ணெய் (Oil of vitriol) சுண்ணாம்பு கரித்தூள் என்பவை சேர்த்துச் செய்யப்படுகின்றது. இது எண்ணெய்ப் பற்றைச் சுத்தஞ் செய்வதற்குப் பயன்படுத்தப்படும். சோடா நிறங்களைப் போக்கும் இயல்பினது. சவுக்காரத்தில் சோடா சேர்ந்திருப்பதால், சவுக்காரத்தை உடம்பிற்றேய்த்துக் குளிப்பின் உடம்பிலுள்ள எண்ணெய்ப் பற்றுக் கழுவப்பட்டுவிடும். அதனால் தோலுக்குக் கெடுதியுண்டாகு மென்று சொல்லப்படுகின்றது.

வாய்வு விட்டடைத்த பானங்கள்: (Aerated Water) இவைகளில் வாய்வு கலந்திருக்கின்றது. இப்பானங்கள் பருகுவதற்குச் சுவை அளிப்பினும் சாதாரண நீரிலும் சிறந்தனவல்ல. அவைகளுட் கலந்துள்ள வாயு கெடுதி விளைக்கக் கூடியன ஆதலின், அவை மறுக்கத் தக்க பானங்களுமாகும்.

தேயிலையும் காப்பியும்: தேயிலையிலும் காப்பியிலும் உற்சாகம் உண் டாக்கத்தக்க ஒருவகை சத்து இருக்கின்றது. தேயிலையை நீண்ட நேரம் கொதி தண்ணீரில் ஊற விடுதலாலும் கொதியாத நீரில் மெதுவாக ஊற விடுதலாலும் தானின் என்ற (Tannin) ஒருவகை நஞ்சு, தேயிலைச்சத் துடன் நீரில் இறங்குகின்றது. இது வாயையும் வயிற்றையும் வறளச் செய்யும். தேயிலையை ஐந்து நிமிடங்களுக்கு மேல் வெந்நீரில் ஊற விடுதல் ஆகாது.

ஆதாமின் அப்பிள்: மனிதரின் தொண்டையின் மேலுள்ள முடிச்சியை ஆதாமின் ஆப்பிள் (Adams Apple) என்பார்கள். விலக்கப்பட்ட கனியைப் புசித்த போது அதின் பகுதி ஒட்டிக் கொண்டமையால் இம் மிதப்பு உண்டானதென்பது கிறித்தவர்கள் நம்பிக்கை. அவர்கள் தண்ணீரை ஆதாமின் பானம் (Adams Ale) எனவும் வழங்குவர்.

ஈசோப்பின் கற்பனைக் கதைகள்: (Aesops Fables) என்னும் சிறிய கட்டுக கதைகளடங்கிய நூல் ஒன்று வழங்குகின்றது. இவர் கிரேக்க நாட்டிலே விடுதலைபெற்ற ஓர் அடிமை. இவர் கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

ஆபிரகாம்: ஆபிரகாம் சாலடியா தேசத்திலே ஊர் என்னும் நகரத்தில் கி.மு. 2153இல் பிறந்தார். இவர் மனைவியுடன் கானான் தேசத்திற்சென்று தங்கினார். இவரின் புதல்வர் இஸ்மேயில் ஈசாக் என்பவர்களினின்றும் முறையே அரேபியரும் எபிரேயரும் தோன்றினார்கள் என்பது பழைய ஐதீகம்.

பிராந்தி: (Brandy) முந்திரிகை இரசத்திலிருந்து (Wine) வாலையிலிட்டு வடிக்கப்படுவது. (Distill) பிரான்சில் செய்யப்படும் பிராந்தி உயர்ந்தது. சீனியைக் கருகவறுத்து நீரில் கரைப்பதால் உண்டாகும் சாயத்தால் இதற்கு நிறம் கொடுக்கப்படுகின்றது.

அத்தர்: ரோஜா மலரைக் குளிர்ந்த நீரில் இட்டுவைப்பின் நீர் மட்டத்தில் ஒருவகை எண்ணெய் மிதக்கும். இதனை இறகால் எடுத்துச் சேர்க்கப் பட்டதே அத்தர் எனப்படுகின்றது. இது சிறந்த வாசனைப் பொருள்.

சவ்வாது: இது சவ்வாதுப் பூனை (Civet Cat) யிலிருந்து எடுக்கப்படுகின்றது. இப்பிராணி, பூனை என்னும் பெயர் பெற்ற போதிலும் நீர் நாய் இனத்தைச் சேர்ந்தது. இதன் நீளம் வாலிலிருந்து தலைவரையும் இரண்டடியும். உயரம் பத்து அங்குலமுமிருக்கும். இது ஆபிரிக்கா. பிரேசில், கினியா(Guinia) முதலிய இடங்களில் பெரிதும் காணப்படும். புனுகு நாவி என்னும் ஒரு வகைப் பூனையிலிருந்து கிடைக்கிறது.

அல்பாக்கா: இது பெரு (தென்னமெரிக்கா) தேசத்தைச் சேர்ந்த நாட்டில் காணப்படும் ஒருவகை ஆடு. இது லாமா என்னும் ஆட்டினத்தைச் சேர்ந்தது. நீண்ட கழுத்துடையது. இதன் உரோமம் மிக மென்மையுடை யது. இதன் உரோமத்தால் அழகிய ஆடைகளும் குடைச் சீலைகளும் நெய்யப்படுகின்றன. இச்சீலை இடப்பட்ட குடை அல்பாக்கக் குடை என வழங்கும்.

ஆராட்டுமா: (Arrow root owders) இது தென்னமெரிக்காவில் வளரும் மரந்தா (Maranta) என்னும் ஒருவகைச் செடியினங்களிலிருந்து எடுக்கப்படு கின்றது. இச்செடி இரண்டு அல்லது மூன்று அடி உயரம் வளரும். இது பிரேசில் நாட்டில் அதிகம் பயிரிடப்படுகின்றது. இதன் வேர் நஞ்சூட்டிய அம்பின் காயத்தை மாற்றும் சிறப்புடையது என்னும் பொருள் பற்றி இதற்கு ‘அரோ ரூட்’ என்னும் பெயர் இடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு வளர்ந்த செடிகளின் வேர்களைக் கிண்டி எடுத்து உரலிலிட்டுத் துவைத்துப் பெரிய தொட்டிகளில் நிறைக்கப்பட்ட நீரில் இடப்படும். வேரிலுள்ள மா அடியில் அடைந்து கிடக்கும். பின்பு இம்மாவைச் சீலையிலிட்டுக் காய விட்ட பின் தகரங்களிலடைத்து வியாபாரத்துக்கு அனுப்பப்படுகின்றது.

செர்மன் சில்வர்: பாதி செம்பு 1/4 பாகம் (Zine) 1/4 நிக்கல் சேர்வதால் செர்மன் சில்வர் என்னும் உலோகம் உண்டாகின்றது.

தர்பன்தைன் (Turpentine): இது பைன் (Pine) மரங்களினின்று வடியும் ஒரு வகை எண்ணெய். நாற்பது ஆண்டுகளுக்குமேல் முதிர்ந்த மரங்களில் மாத்திரம் இவ் வெண்ணெய் வடிகின்றது. பைன் மரங்கள் கனடா, சைபிறஞ் என்னும் இடங்களில் அதிகம் வளர்கின்றன.

கஸ்தூரி: இது கஸ்தூரி மானிலிருந்து எடுக்கப்படுகின்றது. இது மான் மதம் எனப்படும். இது வாசனைப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுகின் றது. கஸ்தூரிமான் இந்தியாவிலும் திபெத்திலும் காணப்படும். செர்மனியர் நிலக்கரித்தாரிலிருந்து (Coal tar) செயற்கைக் கஸ்தூரி செய்கின்றனர்.

கற்பூரத் தைலம்: இது மலாய்த் தேசத்திற் காணப்படும் கற்பூர மரத்திலிருந்து வடியும் ஒருவகை எண்ணெய்; தர்பன்தைன் போன்றது. கற்பூர மரங்கள் பலகைகளாக அறுத்துப் பெட்டிகள் செய்யப்படுகின்றன. இவை வயிர முடையனவல்ல.

கறுவாத் தைலம்: கறுவாப் பட்டையைத் தண்ணீரில் ஊறவிட்டபின் அதனை வாலையிலிட்டுக் கறுவாத் தைலம் வடிக்கப்படுகின்றது. அது காரமான மணமுடையது; நோவைத் தீர்க்கத் தக்கது.

கவடி அல்லது சோகி( Cow rises): கவடிகள் பெரும்பாலும் மாலைத் தீவிற் கிடைக்கின்றன. ஆபிரிக்காவில் இவை சில்லறைப் பணத்துக்குப் பதில் பயன்படுகின்றன. அடிமை வியாபாரக் காலத்தில் பம்பாயிலிருந்து ஆபிரிக்காவுக்கு ஏராளமான கவடிகள் (சோழிகள்) அனுப்பப்பட்டன.

டைனமெட்: இது சுவீடன் தேசத்தவராகிய ஏ நோபெல் (A-Nobel) என்பவ ரால் 1868ஆம் வருடம் சூலை மாதம் 14ஆம் நாள் கண்டுபிடிக்கப் பட்டது. இது மிகவும் பயனுள்ள ஒருவகை வெடி மருந்து. இதனாற் செய்யப்பட்ட வெடிகள் பெரிய பாறைகளைப் பெயர்க்கவும் கட்டடங் களைத் தகர்க்கவும் பயன்படுகின்றது.

புல்லெண்ணெய்: இது இலங்கையிலே உண்டாகும் ‘லெமன் கிரஸ்’ (Lemon grass) என்னும் ஒருவகைப் புல்லிலிருந்து எடுக்கப்படுகின்றது.

லின்சீட் எண்ணெய்: (Linseed Oil) இது பிளாக்ஸ் (Flax) என்னும் சணல் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இது விரைவாகக் காயும் இயல்புடையது. ஆகவே இது மரங்களுக்குப் பூசும் நிறங்களோடு (pint) கலப்பதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.

லினன்: இது ஹெம்ப் (Hem) என்னும் ஒருவகைச் சணல் நாரிலிருந்து நெய்யப்படும் ஒரு வகை ஆடை. ஹெம்ப் என்னும் சணலின் நார் முரடாகவுள்ளது. அதனின்றும் படங்கு (Canvas) நெய்யப்படும்.

அலக்சாந்திரியா புத்தக சாலை: அலக்சாந்திரியா (எகிப்தில்) புத்தக சாலை தாலமி சோதர் என்னும் எகிப்திய அரசன்hல் (கிமு 283) அமைக்கப் பட்டது. இங்கு 700,000 நூல்கள் இருந்தன. ஜூலியஸ் சீசர் முற்றுகை யிட்ட காலத்தில் ஒரு கட்டடத்திலிருந்த நூல்கள் எரிக்கப்பட்டன. கி.பி. 391இல் விக்கிரக வணக்கத்துக்கு மாறாக ஆவேசம் கொண்டெழுந்த கிறித்தவர்கள், ஆலயங்களை அழித்தபோது எஞ்சியிருந்த நூல்கள் அழிந்தும் சிதறியும் போயின. கி.பி. 641இல் ஓமர் என்னும் கலிவ் அலக் சாந்திரியாவைப் பிடித்தபோது அவன் குறானுக்கு மாறாகவும் வீறு கொள் வதோ நூல்களெனக் கூறிப் பிற்காலத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நூல்களையும் எரித்தான்.

கிடைச்சி:(Cork) புட்டிகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும். கிடைச்சி ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி கார்சிக்கா (Corsica) முதலிய இடங்களில் வளரும் ஒருவகை மரங்களிலிருந்து உரித்தெடுக்கும் பட்டை. இம்மரம் முப்பதடி முதல் 40 அடி உயரம் வளருகின்றது. 150 வருடம் நிற்கும். பத்து வருடங்களுக்கு ஒரு முறை இதன் பட்டையை மரத்திற் காய முண்டாகாதபடி கீறி உரித்தெடுக்கப்படுகின்றது. சில மரங்களின் பட்டை முரடாகவிருக்கும். அப் பட்டைகள் வீடு வேய்வதற்குப் பயன்படுத்தப் படுகின்றன.

சவ்வரிசி: இது அரிசி போலக் காணப்படுதலால் அரிசி எனப்படுகின்றது. உண்மையில் இது அரிசியன்று. ஒருவகைப் பனையின் சோற்றி. (குடல்) சுமத்திரா ஜாவாவிலும் மற்றும் மலாயத் தீவுகளிலும் வளர்கின்றது. இதன் ஓலை தென்னோலையைப் போன்றது. இது அத்தாப்பு மரம் எனப் பெயர் பெறும். இம் மரத்தைத் தறித்து உட்குடலை எடுத்துத் தண்ணீரில் கழுவிய பின் இது சவ்வரிசி (Sago) எனப்படுகின்றது.

குங்குமப் பூ: (Saffron Flowers) இது சின்ன ஆசியா, காஸ்மீரம் பாரசீகம் ஸ்பெயின் இன்னும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் உண்டாகும். ஒரு வகைச் செடியின் பூ. வாயிலிட்டு மென்றால் மஞ்சள் நிறமுண்டாகும். இது தமிழ் மருந்துகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இது வீடுகளில் உணவுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விலை அதிகமாயிருப்பதால் பல போலிகள் உண்டு.

சந்தன மரம்: இது இந்தியாவிலே மைசூர், மலையாளம் முதலிய இடங் களில் மாத்திரம் காணப்படுவது. இது எங்கு முளைப்பினும் அரசாங்கத் துக்குடையது. ஒருவரின் நிலத்தில் சந்தனமரம் முளைத்தால் உடனே அரசினருக்கு அறிவிக்கப்படவேண்டும். இலங்கையில் முற்காலங்களில் சந்தன மரத்தினால் கடவுள் விக்கிரகங்கள் செய்யப்பட்டன. இலங் கையிலே தேவன் துறையில் (Dondra Head) இருந்த பெரிய விட்டுணு ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் சந்தனக் கட்டையால் செய்யப்பட்டிருந்தன என்று தெனென்ட் (Tennent) என்பவர் எழுதி யுள்ளார். சந்தனக் கட்டையிலிருந்து சந்தன அத்தர் எடுக்கப்படுகின்றது. இது மருந்தாகவும் மணப் பொருளாகவும் பயன்படுகின்றது. விவிலிய வேதத்திற் சொல்லப்படும் சாலமன் (கி.மு.900) அரசன் இந்தியாவினின் றும் சந்தனக் கட்டைகளைத் தனது மாலுமிகள் மூலம் வாங்கினான். சந்தனக் கட்டை சாம்பிராணி போலத் தூபம் இடவும் உதவும்.

சிலந்தி: சிங்கள மக்கள் கெட்ட பிள்ளைகளைச் சிலந்திப் பூச்சிக்குச் சரி எனக் கூறுவார்கள். சிலந்திப் பூச்சியின் குஞ்சுகள் தாய்ப் பூச்சியை உண்டுவிடுகின்றன.

மரக்கூழ்(Wood pulp) மரங்களை வெட்டி இயந்திரங்களிலிட்டு அரைத்துக் கூழ் போன்ற ஒருவகைக் கழி செய்யப்படுகின்றது. இதனால் கடுதாசி செய்யப்படுகின்றது. இந்தியாவில் மூங்கிலிருந்து இக்கூழ் அரைக்கப்படு கின்றது. புதினப் பத்திரிக்கைகள் பதிக்கும் கடுதாசி செய்வதற்காக நாளொன்றுக்கு முப்பது ஏக்கர் நிலத்திலுள்ள பைன் மரங்கள் (ஆண்டு ஒன்றுக்கு 15 சதுர மைல்) அழிக்கப்படுகின்றன.

முந்திரிகை இரசம் (Wine) இது முந்திரிகை இரசத்தைப் பிழிந்து புளிக்க விட்டுச் செய்யப்படுகின்றது. இது பொங்கி அடங்கிய பின் புட்டிகளில் அடைக்கப்படுகின்றது. இதில் ஓர் அளவு சாராயச் சத்து (Alcohol) உண்டு.

ஸ்டிக்கிள்பாக்(Stickle back) என்பது ஒரு வகை மீன். பெண்மீன் முட்டையிடுவதற்கு ஆண் மீன் கடற் சாதாழைகளைக் கொண்டு கூடு செய்கின்றது. பெண்மீன் முட்டை இட்ட தும் ஆண் மீன் முட்டைகளின் மீதிருந்து அவைகளைக் காவல் செய்கின்றது. வேறு மீன்கள் கூட்டுக்கு அருகாமையில் வந்தால் ஆண்மீன் அதனை மூர்க்கமாகத் தாக்குகின் றது. குஞ்சுகள் கூட்டுக்கு வெகு தூரத்தில் சென்று விட்டால், ஆண்மீன் அவைகளைத் தொடர்ந்து விழுங்கிக் கொண்டு வந்து விடுகின்றது. முட்டை இட்டபின் பெண்மீன் முட்டைகளைக் கவனிப்பதில்லை. ஆனால் அது முட்டை களைத் தின்ன முயலும். ஆண் மீன். அதை அவ்வாறு செய்யாதபடி அதனைத் துரத்திவிடும்.

விஸ்கி: விஸ்கி என்னும் குடி வகை வாளி என்னும் தானியத்திலிருந்து வடிக்கப்படுகின்றது.

டுவிட்: (Tweeds) இது கம்பளியினால் நெருக்கி நெய்யப்படும் ஒரு வகைச் சீலை. இது ஸ்காத்லாந்தில் அதிகம் செய்யப்படுகின்றது. இவ்வாடை விலை ஏறப்பெற்றது.

கல்லாக மாறும் நண்டுகள்: இலங்கையின் கிழக்குக்கரையில் திரிகோண மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. சில காலங்களில் இம்மலையினின் றும் ஒரு வகைத் தைலம் கடலுட்பாய்கின்றது என்று சொல்லப்படுகின் றது. அத்தைலம் பட்ட நீர் வாழும் பிராணிகள் கல்லாய் விடுகின்றன. நண்டுக்கல் என்பன இவ்வகையினவே. அக் கற்கள் உயிர் நண்டின் வடிவின. கல்லாய் இருக்கின்றன. உடைத்தால் உடைகின்றன. வெளிறிய பச்சையும் நீலமும் கலந்த நிறமுடையனவாய்க் காணப்படுகின்றன. இக் கற்கள் மருந்துக்கும் பயன்படுகின்றன.

பூல்ஸ் கேப்: நாம் எழுதும் கடுதாசிக்கு இப்பெயர் வழங்குகின்றது. இது சொல்லுக்கு கோமாளியின் தொப்பி என்பதாகும். இச்சொல் போலியே காப்பே (folio cape) என்னும் இத்தாலிய சொல்லின் திரிபு. 13ஆம் நூற்றாண்டு முதல் 17-வது நூற்றாண்டு வரையில் இக் கடுதாசியில் தண்ணீர் அடையாளத்தில் மணி கட்டிய தொப்பியிடப்பட்டது. இதனால் இப்பிழை மிகப் பழைய காலத்திலேயே விடப்பட்டதெனத் தெரிகின்றது.

துருவக் கரடி: துருவக் கரடி மாரிகாலம் வந்ததும் பனிக்கட்டிகளில் குழி செய்து அதில் மூன்று மாதத்துக்கு ஒரே மூச்சில் உறங்குகின்றது. அக் காலத்தில் அதன் இருதயம் மென்மையாக அடிக்கின்றது. உடம்பில் சூடும் 25 பாகை வரையில்தான் இருக்கிறது. அதன் உடம்பின் சேமிக்கப் பட்ட கொழுப்பு அதற்கு உணவாகப் பயன்படுகிறது. இலை துளிர் காலம் வந்ததும் அது விழித்தெழுகின்றது.

வெட்டி: வெட்டி என்னுஞ் சொல் கூலியின்றி நீ வேலை செய்யப்படும் வேலைக்குப் பெயர். முற்காலங்களில் அரசனுக்காகக் செய்யப்படும் வேலைக்குக் கூலி கொடுக்கப்படவில்லை. இலங்கையில் வெட்டி என்னுஞ் சொல்லுக்குப் பதில் இராசகாரியம் என்னும் சொல்லைப் பயன் படுத்தினர். பெருங்குளங்களை வெட்டுதல் ஆலயங்களைக் கட்டுதல் முதலிய வேலைகள் எல்லாம் மக்களால் கூலியின்றியே செய்யப்பட் டன. போர்வீரர், சிற்பிகள், மற்றுந் தொழிலாளர்களுக்கு நிலங்கள் விடப்பட்டிருந்தன. அவர் அரசனுக்கு வேண்டிய வேலைகளைக் கூலியின்றிச் செய்தனர். இலங்கை அரசரின் போர்வீரர்களுடன் அவர் மனைவியரும் சமையற் பாத்திரங்களும் சமையலுக்கு வேண்டிய அரிசி காய்கறிகளும் கொண்டு அவர்களைத் தொடர்ந்து சென்றார்கள் எனப் படுகின்றது.

முதலைக்கு அடிவயிற்றில் கூச்சம்: முதலை ஆளைப் பிடித்தால் அதன் அடிவயிற்றைத் தடவ வேண்டுமெனச் சொல்லுவார்கள். ரெனென் என்னும் ஆங்கிலர் இன்றைக்கு நூறு ஆண்டுக்கு முன் இலங்கை வரலாறு எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பது வருமாறு ‘ மட்டக்களப்பிலே ஒரு முதலை பிடிக்கப்பட்டிருந்தது. அதனை அசைத்துப் பார்த்தபோது அசையவில்லை. இறந்தது போலவே கிடந்தது. என் மகன் அதன் அடி வயிற்றைத் தொட்டபோது அது உடனே வாலையாட்டி அசைந்தது.

தக்காளி: இது தென்னமெரிக்கச் செடி. நானூறு ஆண்டுகளின் முன் ஐரோப் பாவில் பயிரிடப்பெற்றது. இது இத்தாலியில் நன்கு உண்டாகின்றது. இது இப்பொழுது இந்தியா, இலங்கை, ஜப்பான் முதலிய இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.

தேக்கு: இது இந்தியாவிலும் கிழக்குத் தீவுகளிலும் காணப்படுகின்றது. தேக்க மரங்கள் பர்மாவிலிருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் கப்பல்களும் வீட்டுப் பயனுக்குரிய மரப் பொருள்களும் செய்யப்படுகின்றன. கி.மு. 3000 வரையில் மலையாள கரைகளினின்றும் சென்ற தேக்கமர உத்திரமொன்று சாலடியாவிலுள்ள ஊர் என்னும் நகரின் அழிபாடுகளிற் காணப்பட்டது.

தார்: இது நிலக்கரியை எரித்து எடுக்கப்படுகின்றது. மரத்தை எரித்துக் கரியாக்கும் போது மரத்தார் எடுக்கப்படுகின்றது.

கெந்தகம்: இது எரிமலைப் பக்கங்களில் அதிகமாகக் கிடைக்கின்றது. இது சிசிலி கிரீன்லாந்து முதலிய நாடுகளில் ஏராளமாக உண்டு. இது சூட்டுக்கு உருகும் தன்மை வாய்ந்தது. கந்தகத்துடன் இரசத்தைச் சேர்த்து உருக்கினால் சாதிலிங்கம் என்னும் சிவப்புப் பொருள் உண்டாகும்.

முத்திரையிடும் மெழுகு: (Sealing wax) இது சாதிலிங்கத்தோடு மெழுகு, சாக்குத்தூள் என்பவைகளை இட்டு உருக்குவதால் உண்டாகின்றது.

சீனி: இது பெரும்பாலும் கருப்பஞ்சாற்றிலிருந்து செய்யப்படுகின்றது. பிரான்ஸ் செர்மனி ஆஸ்திரியா இரஷியா முதலிய நாடுகளில் பீட் (Beet Root) என்னும் ஒருவகைக் கிழங்கிலிருந்து செய்யப்படுகின்றது. கரும்பைப் பிழிவது போலவே இக் கிழங்கின் சாற்றைப் பிழிந்து சீனி செய்யப்படுகின்றது. சீனியை வெள்ளையாக்குவதற்கு எலும்புக் கரி (Animal Charcoal) பயன்படுத்தப்படுகின்றது.

உருக்கு: இரும்பை நிலக்கரியோடு சேர்த்து உருக்குவார்கள். இரும்பில் நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் நிலக்கரி சேர்வதால் உருக்கு உண்டாகின்றது. இது சாதாரண இரும்பிலும் உறுதியானது. இதனால் வெட்டாயுதங்கள் செய்யப்படும்.

கடற்பஞ்சு: இது கடலின் அடியில் பாறைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருவகைக் கடற்பிராணியின் உடல். இது மேற்குத் தீவுக் கடல்களிலும் மத்தியதரைக் கடலிலும் அதிகம் காணப்படுகின்றது. துருக்கியை அடுத் துள்ள கடலில் மிக நேர்த்தியான கடற்பஞ்சு கிடைக்கிறது. இது நீரைச் சுத்தஞ் செய்யும் வடிகட்டியாகவும் பயன்படும். இதனைக் கடலுள் முழுகிப் பாறைகளிலிருந்து பிடுங்கி எடுப்பார்கள்.

அச்சுமை: இது லாம்பிளாக் (Lam Black) லின்சீட் எண்ணெய் (Linseed Oil) வார்னிஷ் என்பன கலந்து செய்யப்படுகின்றது. சாதாரண மையில் சிறிது சீனியைக் கலந்து விடின் அது படிஎடுக்கும் மை (Copying Ink) ஆக மாறும்.

பாஸ்பரஸ்: இது மஞ்சள் நிறமுடைய மெழுகு போன்ற ஒரு வகைப் பொருள். இது காற்றிலும் அற்பச் சூட்டிலும் பற்றி எரியக் கூடியது. ஆகவே இது தண்ணீரில் இட்டுப் பத்திரஞ் செய்யப்படும். இது பிராணிகளிலும் தாவரங்களிலும் காணப்படும். நெருப்புக்குச்சி செய்வதற்கு இது அதிகம் பயன்படும்.

பெப்பர்மிண்ட்: இது ஒரு வகைச் செடியின் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இச் செடி ஜப்பான் அமெரிக்கா இங்கிலாந்து முதலிய இடங்களிற் காணப்படுகின்றது. இது மருந்தாகப் பயன்படும். பூச்சிகளைக் கொல்லும்.

மெந்தால்: இது பெப்பர் மிண்டிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை உப்பு. இது பற்பசைகளுக்கும் பற்பொடிகளுக்கும் சேர்க்கப்படுகின்றது. இது காரமான மணமுடையது.

இரசம்: இது உலோகங்களுள் மிகக் கனமானது. நீர் மயமான உலோகம் இது ஒன்றே. இதற்கு ‘குவிக் சில்வர் (Quick silver) என்பதும் இன்னொரு பெயர். இது மருந்துகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இது சூட்டை அறியும் கருவி ‘தர்மாமீற்றர்’ செய்வதற்குப் பயன்படுகின்றது.

மலாக்காப் பிரம்பு: இது மலாக்கா சுமத்திரா ஜாவா முதலிய நாடுகளில் வளரும் ஒரு வகைப் பிரம்பு. இதன் கணுக்களின் இடையே உள்ள பாகம் நீளமாக இருக்கும். எவ்வளவு நீளத்துக்குக் கணுவின்றியிருக்கின்றதோ அவ்வளவுக்கு இதன் விலை அதிகம்.

மைகிறோ போன்: (Micro phone) இது மெல்லிய சத்த அலைகளை உரத்து ஒலிக்கச் செய்யும் கருவி. இப்பொழுது பெரிய சொற்பொழிவுகளிலும் பாட்டுக் கச்சேரிகளிலும் இது பயன்படுகின்றது.

கொரில்லா யுத்தம்: கொரில்லா யுத்தம் என்பது பட்டாளம் அணிவகுத்து நில்லாது அங்கும் இங்கும் சிறு சிறு கூட்டங்களாக மறைந்து நின்று போர்புரிவது.

ஈக்கடியினால் பரவும் வியாதிகள்: மலைச்சுரம் (Malaria) மஞ்சட் காய்ச்சல், நித்திரை வியாதி (Sleeping Sickness) யானைக்கால் வியாதி (Elephantiasis) முதலியன உண்டாகின்றன.

லாமா: இது தென்னமெரிக்க ஒட்டகம் எனப்படும் ஒரு வகை ஆடு. இது 50 இராத்தல் முதல் நூறு இராத்தல் சுமையைக் கொண்டுச்செல்லும். இதற்கு எவரேனும் அதிக தொந்தரவு கொடுத்தால், அது அவர் மீது அதிக உமிழ் நீரைக் கொப்பளித்து விடும்.

பாலி: இது ஜாவாவுக்கு அயலிலுள்ள தீவு. இன்றும் இங்குள்ள மக்கள் இந்துமதத்தையே கைக்கொண்டு வருகின்றனர். இந்திய நாட்டிற் காணப்படுவது போல அவர்களுக்குள்ளேயும் பிராமணர்கள் உண்டு.

இலைகள் பச்சையாயிருப்பதேன்?: காற்றிலிருந்து கரியமில வாயுவை (Carbondioxide) வாங்கி ஆகாரத்தை உண்டாக்குவதற்குப் பச்சைநிறம் தாவரங்களுக்கு உதவியாயிருக்கின்றது.

முகில்: (மேகம்) மிக உயரமான முகில் 5 மைலிலும் தாழ்ந்த முகில் ஒரு மைலிலும் உலாவும்.

மின்னல்: முகில்களிலே காந்த சக்தி இருக்கின்றது. காந்தசக்தி முகிலி லிருந்து முகிலுக்குப் பாய்வதால் மின்னல் உண்டாகின்றது. இவ்வாறு பாயுமிடத்து மின்னற்பொறி நிலத்திற் பாய்வதே இடியேறு எனப்படு கின்றது. மின்னல் எந்தப்பொருளுக்கும் நெருப்பை மூட்ட மாட்டாது. வெடிமருந்துக்கு ஊடாகச் செல்லுதல் கூடும். ஆனால் மின்னற் பொறி தாக்கிய இடம் நொறுங்கிவிடுகின்றது.

நாம் மூச்சு விடுவதேன்?: பிராணிகள் உயிருடன் இருக்க வேண்டுமானால் உடம்பில் மெல்லிய நெருப்பு எரிந்துகொண்டிருக்க வேண்டும். அவ் வாறு நெருப்பு எரிதற்காகவே எல்லாப் பிராணிகளும் மூச்சு விடுகின்றன. பிராணவாயு எரியும் தன்மையுள்ளது. அது வேறு பொருள்களுடன் கலப்பதால் நெருப்பு உண்டாகாமல் சூடு மாத்திரமே பெற்றிருக்கிறது.

பிராணிகள் பலவாறு மூச்சு விடுகின்றன: பூச்சிகள் உடம்பிலுள்ள துவாரங்கள் வழியாகச் சுவாசிக்கின்றன. நத்தை, ஓட்டுக்குச் சமீபத்தே வலப்பக்கத்திலுள்ள சிறிய துவாரத்தால் மூச்சு விடுகின்றது. தவளைக்கு மூச்சுப்பை உண்டு. இது உடம்பிலுள்ள துவாரங்களாலும் மூக்கினாலும் மூச்சு விடுகின்றது. நீரில் வாழும் பிராணிகள் நீரில் கலந்துள்ள பிராண வாயுவைச் சுவாசிக்கின்றன.

பூனை இரவில் பார்க்கும்: பூனையின் கண்கள் இருட்டில் பார்க்கக் கூடியன. வெளிச்சத்தில் அதன் கண்களின் விழி, கீறு போலத் தோன்றும்; மங்கிய வெளிச்சத்தில் வட்டமாகவும், பிரகாசமாகவும் தோன்றும் இவ்வாறு இருப் பதினாலேயே அது இரவிற் பார்க்கின்றது. அது இரவில் இரை தேட வேண்டியிருத்தலின் கடவுள் அதற்கு இவ்வகை உதவி அளித்திருக்கின் றார். சீனா தேசத்தில் மக்கள் பூனையின் கண்ணைப் பார்த்து நேரமறி வார்கள்.

நஞ்சுப்பெண்: அலக்சாந்தருக்கு இந்திய வெகுமதிகளுள் ஒரு கன்னிப் பெண்ணுமிருந்தாள். அவள் இளமைதொட்டு நஞ்சூட்டி வளர்க்கப்பட்ட மையின், பாம்பின் குணமுடையவளாயிருந்தாள். அவளின் எச்சிலைத் தின்ற பிராணிகள் இறந்துவிட்டன. இவ்விவரம் அரிஸ்டாட்டில் (Aristotle) என்பவரால் கூறப்பட்டுள்ளது. இது மத்தியகாலக் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.

ஓமத் திராவகம்: (Omam Water) ஓமத்தைத் தண்ணீரில் ஊறவிட்டு வாலை யில் வடித்தால் ஓமத் திராவகம் பெறலாம். இது புளிக்காது. நாட்பட இருக்கும். ஓமத்தில் எடுக்கப்படும் உப்புத் ‘தைமால்’ எனப்படும். இது எரிவைக் கொடுக்கும். மெந்தால் தைமால் கற்பூரம் என்பவைகளை தேன் மெழுகுடன் சேர்த்துக் காய்ச்சி நோத் தைலம் (pin balm) செய்யப் படுகின்றது.

சித்தாந்த சாத்திரங்கள்: இவை தமிழ் மக்களின் உண்மை ஞானமாகிய உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருளுண்மைகளை ஆராய்ந்து கூறுவன. தேவார திருவாசகங்களிலும் திருமந்திரத்திலும் கன்ன பரம்பரை வழக்கிலும் இருந்த முப்பொருளுண்மைகளை மெய்கண்டார் (கி.பி.1200) சிவஞான போதமென்னும் நூலாகச் செய்தார். இவர் மாணவரும் அம்மரபில் வந்தோரும் வழி நூல் சார்பு நூல்களாகச் சித்தாந்த நூல் செய்தனர்.

வீரசைவர்: இவர்கள் இலிங்கத்தை அணிந்து கொள்வர்.பிராமணர்களின்றி கிரியைகளைத் தாமே செய்துகொள்வர். இறந்தவர்களைப் புதைப்பர். சைவ சித்தாந்தக் கொள்கைக்கும் இவர்கள் கொள்கைக்கும் சிறிது வேறுபாடுண்டு. இது பிராமண மதத்துக்கு மாறாக எழுந்த சமயம். இம்மதத் தலைவர் வசவ தேவர்.

பாலி: இது புத்தர் பேசிய மொழி. இது மகதம் எனப்படும். இம்மொழியில் இலங்கைப் புத்தர் பெரியார்கள் நூல்கள் எழுதினர். இலங்கையிலே புத்த கொள்கைகள் எழுதப்பட்ட பாலி நூல்கள் வழங்குகின்றன. சிங்கள மொழியில் அதிக பாலிக் கலப்புண்டு.

கண்ணகி வழிபாடு: இவ் வழிபாடு இந்தியாவிலே சேரன் செங்குட்டுவனால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் இதனைக் கயவாகு கி.பி.175இல் ஆரம்பித்தான். சிங்களவர், கண்ணகிக் கடவுளின் சிலம்பை வணங்கி னார்கள். கொழும்பு நூதன பொருட்காட்சிச் சாலையில் நூற்றுக்கணக்கான கண்ணகிச் சிலம்புகள் காணப்படுகின்றன. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கண்ணகிச் சிலை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

பேய் வணக்கம்: சிங்கள மக்கள் மனிதருக்கு உண்டாகும் நோய் ஒவ்வொன் றும் ஒவ்வொரு பேயினால் உண்டாகின்றதென்று நம்பி வருகிறார்கள். சிங்கள ஆண் பெண் இருபாலாரும் தாயத்துக்களை அணிந்திருப்பர். ஒருவருக்கு நோய் கண்டால் அவர்கள் பயங்கரமான முகமூடி தரித்துப் பேய்க் கூத்தாடுகின்றனர்.

இலங்கை வேடர்: இலங்கை வேடரில் இப்பொழுது மிகச் சிறு தொகை யினரே காணப்படுகின்றனர். மற்ற மக்கள் சிங்களவரோடும் தமிழ ரோடும் கலந்துள்ளார்கள். இவர்கள் காடுகளிலே மரங்களின் கீழும் மலைத் தாழ்வாரங்களிலும் வாழ்வர். வில்லும் மயிலிறகின் அடி இறகு கட்டிண அம்புங்கொண்டு வேட்டையாடுவர். அவர் தமக்கு ஏதும் ஆயுதம் தேவைப்பட்டால், ஒரு கொல்லனது பட்டரைக்கு இராக் காலத்திற் சென்று, இரு இலையில் தாம் வேண்டிய வடிவத்தை எழுதி அதோடு மானிறைச்சியையும் வைப்பார்கள். அவ்விடத்தில் கொல்லன் ஆயுதத்தைச் செய்து வைப்பான். அவர்கள் அவ்விடத்திற் சென்று அதனை எடுப்பார்கள். அவர்கள் மரப்பொந்துகளில் இறைச்சிக் கருவாடுகளை இட்டுத் தேனூற்றிப் பாடஞ் செய்வர். இவர்கள் பேசும் மொழியில் சிங்களச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் காணப்படுகின்றன.

பால் மாட்டு மரம்: தென்னமெரிக்காவிலே பால்மாட்டு மரம் என ஒரு வகை மரம் வளர்கின்றது. அதன் அடியைக் காயப்படுத்திவிட்டால் அதிலிருந்து பசுப்பால் போன்ற பால் வடிகிறது. இதற்குப் பசுப்பாலின் குணமிருக்கிறதெனச் சொல்லப்படுகிறது. இது அல்சீரியாவில் அதிகம் காணப்படுகிறது.

கோழிமுட்டை: கோழி வருடத்தில் 120 முதல் 150 முட்டைகள் வரையில் இடுகின்றன. இது அவைகளில் அடையிருந்து குஞ்சு பொரிப்பது 30 நாள் வரையில். இதன் முட்டையில் வெள்ளை, மஞ்சள் என்ற இரு பகுதிகள் உண்டு. இதின் வெள்ளைப் பாகம் முட்டையிலிருந்து குஞ்சு வளரும்போது அதற்கு ஆகாரமாக உதவுகிறது. மஞ்சள் பாகத்தில் சிறிது கருமையுள்ள பாகமுண்டு. அதுவே கோழிக்குஞ்சின் கரு. இதிலிருந்து கோழிக் குஞ்சு உண்டாகின்றது. வெள்ளைக் கருவில் பசுப்பாலிலுள்ள எல்லாச் சத்துக்களும் உண்டு. அதனாலேயே நோயாளருக்கு முட்டையின் வெள்ளைக்கரு ஆகாரமாகக் கொடுக்கப்படுகிறது. கோழி முட்டை கோழியால் அடைக்காக்கப்படுமாயின் அது 21 நாட்களிற் பொரிக்கும். கோழி அடை கிடந்த மூன்றாவது நாள் முட்டையில் இருதயத் துடிப்புக் காணப்படும்.

உலகிற் பெரிய ஆலமரம்: கல்கத்தா தாவரத் தோப்பில் (Botanical garrden) ஒரு ஆலமரம் நிற்கின்றது. இது இரண்டரை ஏக்கர் நிலத்தை மூடி நிற்கின்றது. இதற்கு 15,000 விழுதுகள் தூண்கள் போலிருக்கின்றன.

மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்: குரங்கினுடைய அங்க அமைப் பும் மனிதனின் அங்க அமைப்பும் ஒரே வகையின. அதுவுமன்றி இருவருடைய மனம் வேலை செய்யும் முறையிலும் சில ஒற்றுமை உண்டு. மிகவும் கீழ் நிலையிலுள்ள மனிதனுக்குக் குரங்கை ஒப்பிடலா மென்பது இயற்கை நூற் புலவர்களுடைய கருத்து. இவ்வடிப்படையான கருத்திலிருந்தே மனிதன் குரங்கு முன்னோரிலிருந்து தோன்றினான் எனத் தோற்றவளர்ச்சி நூலார் கூறுவர். இதனை எல்லோரும் ஏற்றுக்கொள் வதில்லை. உலகில் ஒவ்வொரு உயிருள்ளனவும் கடவுளால் படைக்கப் பட்டு வடிவிலும் மற்றும் இயற்கைக் குணங்களிலும் மாறுபடாமற் றொன்று தொட்டு வருகின்றனவென்பது கிரேக்கர், இந்துக்கள், கிறிஸ்த வர்கள் போன்றவர்களின் கொள்கையாகும்.

மணி பல்லவம்: இது இலங்கைக்கு வடக்கே உள்ள குடா நாடு. இலங்கை யின் வட பகுதி முன்னே நாகதீவு என வழங்கிற்று. நாகதீவின் ஒரு பகுதியே மணிபல்லவம். மணிபல்லவ அரசர் மரபினரே பல்லவ அரசர் என்பது சில வரலாற்று நூலார் கருத்து. மணிபல்லவத்தைப் பற்றி மணி மேகலை என்னும் நூல் கூறுகின்றது. மணிமேகலை கி.பி. 200 வரையில் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவராற் செய்யப்பட்டது. மணிபல்லவம் இன்று யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றுள்ளது.

சங்கு: ஆயிரஞ் சிப்பி சூழ்ந்தது ஒரு இடம்புரி; ஆயிரம் இடம்புரி சூழ்ந்தது ஒரு வலம்புரி. ஆயிரம் வலம்புரி சூழ்ந்தது ஒரு சலஞ்சலம். ஆயிரஞ் சலஞ்சலம் சூழ்ந்தது ஒரு பாஞ்சன்னியம். இது திருமாலின் கையி லிருப்பது என்பது ஐதிகம். சங்கு இலங்கையின் வடகரையிலுள்ள நயினார் தீவு ஊர்காவற்றுறைப் பக்கங்களில் அதிகம் குவிக்கப்படுகிறது.

உரோடியர். இலங்கையிலே உரோடியர் என்னும் வகுப்பினர் சிங்களவர் களுள் காணப்படுகின்றனர். இவர்கள் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இவர்கள் அழகுடையவர்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் அரசனுக்கு மாறாகச் சதிகளில் தொடர்பு பட்டமையால் இவர்களைப் பிச்சையெடுத்து வாழும்படியும் வேறு தொழில்கள் எதுவும் செய்யாதிருக்கும்படியும் அரசர் கட்டளையிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது. இலங்கைத் தமிழர்களுள் துரும்பர் என்னும் இன்னொரு ஜாதியினர் காணப்படுகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்ணார வேலை புரிவர். முற் காலங்களில் இவர்கள் பகலில் வெளியில் வருதல் கூடாதெனவும் இரவில் வெளியில் வரலாம் என்னும் கட்டளை யிருந்ததென்றும் உரோடியரைப் போலவே இவர்களும் ஒதுக்கப் பட்டவர்கள் எனவும் கருதப்படுகின்றனர்.

காரணமின்றிப் பகை: வேதியர், நாய், வைத்தியர், கோழி என்பன ஒருவரையொருவர் கண்டால் காரணமின்றிப் பகை கொள்வர் என்று நீதி வெண்பா என்னும் நூல் கூறுகின்றது.